தொழில் நிறுவனங்களில் அரசு பிரதிநிதிகளின் பங்கு என்ன?

Webdunia

வியாழன், 13 டிசம்பர் 2007 (12:14 IST)
தொழில் வர்த்தக நிறுவனங்களின் இயக்குநர் குழுவில் இடம் பெறும் அரசு பிரதிநிதிகளின் பங்களிப்பு பற்றி செபி தலைவர் தாமோதரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

மும்பையில் நேற்று இந்திய தொழிலக கூட்டமைப்பு சார்பில் நிறுவனங்களின் பொறுப்பு என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பங்குச் சந்தை கட்டுப்பாட்டு வாரியத்தின் (செபி) தலைவர் எம்.தாமோதரன் சிறப்புரையாற்றினார்.

அப்போது அவர் கூறியதாவது: நிறுவனங்களின் இயக்குநர் குழுவில் குறிப்பிட்ட துறைக்கு பிரதிநிதித்துவம் என்பதற்காக மட்டுமே இயக்குநர்களாக உள்ளவர்கள் தேவையா என்ற கேள்வி பலமுறை எழுப்பப்பட்டுள்ளது. இந்த கேள்வி அரசின் சார்பாக உள்ள இயக்குநர்களுக்கு எதிராகவும் கேட்கப்படுகிறது. இந்த அரசு சார்பு இயக்குநர்கள், இயக்குநர்கள் குழு கூட்டத்தில் பங்கு பெறும் போது, அவர்கள் அரசு பிரதிநிதிகளாக மட்டுமே (அரசின் நலனை காப்பவர்களாக) பங்கேற்கின்றார்களா அல்லது அவர்கள் யாருக்காக இயக்குநர்களாக இருக்கின்றார்கள் என்பதை மறந்து விட்டு, அந்த நிறுவனத்தின் நன்மைக்காக செயல்படுகின்றார்களா என்ற கேள்வி எழுகிறது. இத்தைகைய கேள்விகள் வளர்ச்சிக்கானவை. இவைகள் பற்றி தொடர்ந்து விவாதிக்க வேண்டும்.

ஒவ்வொரு நிறுவனத்திலும் உள்ள இயக்குநர்கள் குழுவில் இடம் பெற்றுள்ளவர்களே சிறந்த நிர்வாகத்திற்கும், வளர்ச்சிக்கும் பொறுப்பாளர்களாக இருக்கின்றனர். இதனால் திறமையானவர்கள் இயக்குநர் குழுவில் இடம் பெற பங்கேற்க வைப்பது முக்கியமானது. அதே நேரத்தில் இவர்களால் பலன் கிடைக்க வேண்டும். புகழ் பெற்ற பெரிய மனிதர்கள் இயக்குநர் குழுவை ஆக்கிரமித்துக் கொள்வதை விரும்பவில்லை.

இதில் சிறந்த முறையில் தங்களின் பங்களிப்பை செய்பவர்கள் மட்டுமே வேண்டும். அவர்களுக்கு தொழில் நிறுவனங்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவது பற்றி பயிற்சி அளிக்கப்பட வேண்டும். அவர்கள் இந்த சவாலை ஏற்றுக் கொள்ளக் கூடியவர்களாக இருக்க வேண்டும் என்று செ‌பி தலைவர் எம்.தாமோதரன் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்