இந்தியர்களை இடிஅமீன் வெளியேற்றியதால் உகாண்டா பொருளாதாரம் சீரழிந்தது: உகாண்டா அதிபர்!
Webdunia
சனி, 24 நவம்பர் 2007 (17:41 IST)
கடந்த 1970 -ஆம் ஆண்டு 60 ஆயிரம் இந்தியர்களை இடிஅமீன் ஆட்சிக் காலத்தில் வெளியேற்றியதால் உகாண்டாவின் பொருளாதாரம் நிலைக்குலைந்து போனதாகவும், தேசியமயம் என்பதைச் செயல்படுத்த தனியார் நிறுவனங்களின் அலுவல்களில்அரசு நுழைந்ததால் ஆப்பிரிக்க நாடான உகாண்டாவின் பொருளாதாரம் சீரழிந்துபோனதாகவும் கம்பாலாவில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் பேசிய உகாண்டா அதிபர் கூறினார்.
இடிஅமீன் ஆட்சிக்காலத்தின் போது இந்திய சமூகத்தினர் தொழில் முனைவோர்களாக இருந்தனர் என்றும், இந்தியர்களை வெளியேற்றுவதில் இடிஅமீன் நடந்து கொண்ட விதத்தையும் சோகெம் மாநாட்டில் கூடியிருந்த காமன்வெல்த் நாடுகள் கூட்டமைப்பின் தலைவர்கள் இடையே பேசும் போது அவர் தெரிவித்தார். பிரதமர் மன்மோகன் சிங்கும் அப்போது அங்கு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
உகாண்டாவில் மட்டுமல்ல பல ஆப்பிரிக்க நாடுகளின் தலைவர்களும் அந்த காலகட்டத்தில் தனியாருடைய தொழில்களை அரசுடமையாக்கப் போவதாக கூறி தனியாரின் தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக தெரிவித்தார்.
இந்தியர்கள் வெளியேற இடிஅமீன் 3 மாத காலம் அவகாசம் கொடுத்ததாகவும், அப்போது உகாண்டாவை விட்டு வெளியேறிய இந்திய சமூகத்தினர் இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் சென்று குடியேறியதாகவும், இது உகாண்டாவின் பொருளாதாரம் அதல பாதாளத்துக்கு சரிவதற்கு அடிப்படையாக அமைந்தது என்றும் அதிபர் ககுட்டா மூஸ்வேனி கூறினார்.
இதனிடையே தற்போதைய அதிபர் ககுட்டா மூஸ்வேனி ஆட்சி பொறுப்பேற்றவுடன் உகாண்டாவை விட்டு வெளியேற்றப்பட்ட இந்திய சமூகத்தினர் உள்ளிட்ட ஆசிய சமூகத்தினருக்கு விடுத்த அழைப்பையேற்று 2,000 இந்தியர்கள் மட்டும் உகாண்டாவுக்குத் திரும்பி தங்களது பழைய தொழில்களை மீண்டும் தொடங்கியுள்ளனர்.
நாடு சுதந்திரமடைந்தது தொடங்கி மிகப் பெரிய சவாலான உள்நாட்டுச் சந்தையையும், அதன் வளங்களையும் மக்களின் வளர்ச்சிக்கு பயன்படுத்த முறையாக திட்டமிட்டு இந்தியத் தலைவர்கள் செயல்பட்டதை சுட்டிக் காட்டினார். சுதந்திரமடைந்த போது முழுக்க முழுக்க விவசாய நாடாக இருந்த இந்தியாவை தொழில் வளர்ச்சியடைந்த நாடாக ஏன் இன்னும் அதைவிட அதிகம் முன்னேற்றம் அடையச் செய்த இந்தியத் தலைவர்களின் தொலைநோக்கு பார்வையும், செயல்பாடுகளும் உண்மையிலேயே பாராட்டுக்கு உரியது என்று உகாண்டா அதிபர் ககுட்டா மூஸ்வேனி வெகுவாக பாராட்டி பேசினார்.
சர்வதேசச் சந்தையில் அதிக அளவில் பங்கேற்றுச் செயல்பட ஏதுவாக கடந்த 1990 ஆம் ஆண்டு இந்திய பொருளாதாரம் திறந்து விடப்பட்ட போது, வளர்ச்சியடைந்த மேலை நாடுகளின் சவால்களை எதிர்கொள்ளும் வகையில் உறுதியாக இருந்ததே, இந்தியத் தலைவர்களின் தொலைநோக்கு பார்வைக்கு சான்று என்று கூறினார்.
கடந்த 1960-70 ஆம் ஆண்டுகளில் ஆப்பிரிக்க நாடுகளின் தலைவர்கள் செய்த தவறுகளை திரும்பச் செய்யாமல், சில தவறுகளைத் திருத்திக் கொண்டு எடுத்த நடவடிக்கையின் பலனாக உகாண்டாவின் பொருளாதார வளர்ச்சி ஆண்டுக்கு 6 விழுக்காடு என்ற அளவில் அதிகரித்து வருவதாக அதிபர் ககுட்டா மூஸ்வேனி கூறினார்.