இந்திய - ஆப்பிரிக்க ஹைட்ரோ கார்பன் மாநாடு!

Webdunia

செவ்வாய், 6 நவம்பர் 2007 (18:21 IST)
தலைநகர் டெல்லியில் நடைபெறும் இந்திய - ஆப்பிரிக்க நாடுகளுக்கு இடையேயான ஹைட்ரோ - கார்பன் (எரிசக்தி) மாநாட்டை அயலுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி தொடங்கி வைத்தார்.

இம்மாநாட்டில் கலந்து கொண்டு பெட்ரோலியம் - இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் முரளி தியோரா சிறப்புரையாற்றினார். இம்மாநாட்டையொட்டி அமைக்கப்பட்டுள்ள கண்காட்சியை பெட்ரோலியம் - இயற்கை எரிவாயுத் துறை இணை அமைச்சர் தின்ஷா பட்டேல் பிற்பகல் தொடங்கி வைத்தார். இரண்டு நாட்கள் நடைபெறும் இம்மாநாட்டை யுனிகார்டு இந்திய தொழில் கூட்டமைப்பு, பெட்ரோலிய - இயற்கை எரிவாயுத் துறை ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்துள்ளது.

இந்தியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளிடையே ஹைட்ரோ கார்பன் துறையில் பரஸ்பரம் நன்மை பெறுவது என்ற அடிப்படையிலேயே இந்த மாநாட்டிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ஹைட்ரோ கார்பன் (கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு போன்றவை) இறக்குமதி செய்வதில் இந்தியா முக்கியமான நாடாக திகழ்கிறது. மேலும் இது தொடர்பான ஆலோசனை சேவை வழங்குவது, ஹைட்ரோ கார்பன் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் முழுமையான அளவில் திட்டங்களை நிறைவேற்றுவது, இது தொடர்பான இயந்திரங்கள் ஏற்றுமதி, பிளாஸ்டிக் வேதிப்பொருட்கள், பன்முக பைப்லைன் பொருட்கள் ஆகியவை வழங்குவதில் நிபுணத்துவம் பெற்றுள்ளது. இந்திய ஹைட்ரோ கார்பன் சந்தை தற்போது தொழில் வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக மற்ற துறைகளை விட தனித்து சிறந்து காணப்படுகிறது.

விரைவான பொருளாதார வளர்ச்சி நாட்டின் எரிசக்தி உற்பத்தியில் பற்றாக்குறையை உருவாக்கி உள்ளது. இதனால் நீண்டகால அடிப்படையில் எரிசக்தியை தரும் திட்டங்கள் தற்போது இன்றியமையாததாகிவிட்டது.

உலகில் கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு இறக்குமதியில் இந்தியா முன்னணியில் உள்ளது. கச்சா எண்ணெய் இனம் கண்டறிதல் உற்பத்தி, பராமரிப்பு, போக்குவரத்து, சுத்திகரித்தல் ஆகிய துறைகளுக்கு தேவைப்படும் இயந்திரங்கள், சேவைகளை ஏற்றுமதி செய்யக்கூடிய நிலையில் இந்தியா உள்ளது.

கச்சா எண்ணெய்க்கான தேவை அதிகரித்து வரும் நிலையில், அதிகப்படியான எண்ணெய் வளமும், புதிய எண்ணெய் வயல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதும் கச்சா எண்ணெய் உற்பத்தி நாடுகளின் பட்டியலில் ஆப்பிரிக்காவை பிரதான இடத்தை நோக்கி நகர்த்தி வருகிறது.

ஆப்பிரிக்க நாடுகளில் மேம்பட்டுவரும் சமூக - பொருளாதார நிலைகளும், கடலுக்குள்ளும் கடற்கரைப் பகுதிகளிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய எண்ணெய் ஆதாரங்களும், அது தொடர்பாக பல்வேறு திட்டப் பணிகளிலும் அந்திய முதலீடுகளை ஈர்க்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

இதன்மூலம் ஆப்பிரிக்க நாடுகள் சமூக பொருளாதார வளர்ச்சியை பெறுவதுடன், சர்வதேச கச்சா எண்ணெய் உற்பத்தி வரைபடத்திலும் இடம்பெற ஏதுவாக இருக்கும்.

இந்த அடிப்படையில் இந்திய - ஆப்பிரிக்கா இடையே இயற்கையான கூட்டணி உருவாவது இயல்பானதாக அமைந்துள்ளது.

இந்தப் பின்னணியில் மொபெங், இந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பு, யுனிகார்டு ஆகியவை இணைந்து இந்தியா - ஆப்பிரிக்கா இடையே ஹைட்ரோ கார்பன் துறையில் இணைந்து பங்காற்றுவது தொடர்பான யுத்திகள் குறித்து முடிவெடுக்க இந்த மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளது. ஹைட்ரோ கார்பன் அதிகம் கொண்டுள்ள ஆப்பிரிக்காவும், இந்தியாவில் தற்போது உள்ள விரைவான பொருளாதார வளர்ச்சியின் விளைவாக ஏற்பட்டுள்ள தேவையும் முக்கிய திருப்புமுனையை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆப்பிரிக்கா நாடுகளின் எண்ணெய் வளம் மிகுந்தவற்றின் அமைச்சர்கள், அரசு, தனியார் பெட்ரோலிய நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் இந்திய அதிகாரிகளுடன் பேச்சு நடத்தவும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்திய ஹைட்ரோ கார்பன் நிறுவனங்களின் விவரங்கள், அவற்றின் திறன்களையும், சர்வதேச அளவில் எதிர்நோக்கும் போட்டிகளை சமாளிக்கும் தொழில்நுட்பங்கள் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளது. இத்துறை வல்லுநர்கள், அரசு உயர் அதிகாரிகள், ஒழுங்குமுறை ஆணையத்தைச் சேர்ந்த அதிகாரிகள், வர்த்தகர்கள், முதுநிலை வங்கி அதிகாரிகள் ஆகியோர் இம்மாநாட்டிற்கு வரும் ஆப்பிரிக்க நாடுகளின் குழுவினருடன், தொழில்நுட்ப பரிவர்த்தணை, வணிகம், இ¨ந்து திட்டங்களைச் செயல்படுத்துவது தொடர்பாக பேச்சு நடத்துகின்றனர். ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த 12 அமைச்சர்கள் தங்கள் நாட்டின் உயர்மட்ட குழுவினருடன் இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ளனர்.

நூற்றுக்கும் அதிகமான சர்வதேச பிரதிநிதிகள் இம்மாநாட்டில் பங்கேற்றுள்ளதோடு லிபியா, நைஜீரியா, எகிப்து, தென் ஆப்ரிக்கா, நமிபியா உள்ளிட்ட 25 ஆப்பிரிக்கா நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனைத் தவிர ஆப்பிரிக்க நாடுகளில் காணப்படும் வாய்ப்புகள் மற்றும் ஒட்டுமொத்த நிலை தொடர்பாக ஆப்பிரிக்க அமைச்சர்கள் பங்கேற்கும் 2 அமர்வுகளும் நடைபெறவுள்ளது. அதில் இந்தியா - ஆப்பிரிக்கா இடையிலான வணிகம், முதலீடு, சுற்றுச்சூழல், இயற்கை எரிவாயு, சேவைத் துறை உள்ளிட்ட துறைகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய திட்டங்கள், வணிகம், ஒப்பந்தங்கள், ஒழுங்குமுறை ஆகியவை குறித்து விரிவாக விவாதிக்கப்பட உள்ளது. வணிக நிறுவனங்களின் தலைவர்கள், அரசு பிரதிநிதிகளுடன் கலந்துரையாடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஹைட்ரோ கார்பன் துறையை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளும் வகையில் மறுசீரமைப்பு மேற்கொள்ள பெட்ரோலியம் இயற்கை எரிவாயுத் துறை முக்கிய நிலை மேற்கொண்டுள்ளது.

புதிய எண்ணெய் கிணறுகளை அமைக்க உரிமம் பெறுவது இதன் முக்கிய அம்சமாகும். இதன்மூலம் இந்தியாவின் எண்ணெய், இயற்கை எரிவாயு சேமிப்பு பகுதிகளை கண்டறிந்து இந்திய ஹைட்ரோ கார்பன் சேமிப்பை அதிகரிக்கும் பணியில் சர்வதேச எரிசக்தி முன்னணி நிறுவனங்கள் செயல்பட இத்திட்டம் உதவுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்