உலக வங்கி கடன் தொடர வேண்டும் : சிதம்பரம்

Webdunia

செவ்வாய், 23 அக்டோபர் 2007 (18:05 IST)
இந்தியா குறிப்பிடத்தக்க வளர்ச்சி அடைந்தாலும், உலக வங்கி இந்தியாவுக்கு வழங்கும் கடனை குறைக்க கூடாது என்று மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் கூறினார்.

இதை வாஷிங்டனில் பி. டி. ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் சிதம்பரம் தெரிவித்தார்.

உலக வங்கி, சர்வதேச நிதியத்தின் (ஐ.எம்.எப்) வருடாந்திர கூட்டத்தில் கலந்து கொள்ள வாஷிங்டனுக்கு சிதம்பரம் சென்றுள்ளார். அங்கு அளித்த பேட்டியில் சிதம்பரம் கூறியிருப்பதாவது:

நீங்கள் இந்தியா 9 விழுக்காடு வளர்ச்சி அடைந்து உள்ளதை பார்க்கலாம். ஆனால் உற்று பார்த்தால் இந்தியாவின் சில பகுதிகளில் 4 விழுக்காடு, 5 விழுக்காடு மட்டுமே வளர்ச்சி அடைந்துள்ளதை காணலாம். ஆனால் இன்னும் சில பகுதிகளில் இதை விட குறைவான வளர்ச்சி விகிதம் இருப்பதை அறியலாம். அவர்கள் மிகவும் ஏழைகள், அவர்களுக்கு உதவி தேவைப்படுகிறது. உலக வங்கி அவர்களுக்கு உதவி வழங்க வேண்டும் என்று சிதம்பரம் பேட்டியில் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், இந்தியாவும், சீனாவும் பொருளாதார ரீதியாக வளர்ச்சி அடைந்துள்ளன. இந்த இரு நாடுகளின் அந்நியச் செலவாணி கையிருப்பு அதிகரித்துள்ளது. இந்த காரணங்களினால் உலக வங்கி இந்தியாவுக்கும், சீனாவுக்கும் கடன் வழங்குவதை குறைத்துள்ளது.

இது உலக வங்கியிலும், சர்வதேச நிதியத்திலும் உள்ள சில பிரிவினரின் தவறான பரிந்துரையால் எடுக்கப்பட்டுள்ள முடிவாகும். இந்த முடிவு முழுவதும் தவறானது.

சீனா 10 விழுக்காடு வளர்ச்சி அடைந்துள்ளது. இந்தியா 9 விழுக்காடு வளர்ச்சி அடைந்துள்ளது. அதே நேரத்தில் இந்தியாவில் பெருவாரியான மக்கள் 9 விழுக்காடு வளர்ச்சி அடையாமல் இருக்கின்றனர் என்பதை தயது செய்து எண்ணிப் பாருங்கள். உலகத்தின் மொத்த பரம ஏழைகளில் இந்தியாவிலும், சீனாவிலும் 75 கோடி பேர் இருக்கின்றனர்.

இந்தியாவுக்கும், சீனாவுக்கும் உதவி வழங்காவிட்டால் ஐக்கிய நாடுகள் சபையின் மில்லினியம் குறிக்கோளை எட்ட முடியாது.
2015 ம் ஆண்டு வரும், போகும். நீங்கள் இந்தியாவையும், சீனாவையும் புறக்கணித்தால் மில்லினியம் குறிக்கோளை எட்ட முடியாது.

இந்தியா, உலக வங்கியிடம் இருந்து அதிகளவு கடன் வாங்கும் நாடு என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். உலக வங்கி இந்தியாவுக்கு தொடர்ந்து முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
இந்த பிரச்சனையை உலக வங்கி, சர்வதேச நிதியத்தின் வருடாந்திர கூட்டத்தில் கலந்து கொண்ட எந்த பிரதிநிதியும் (எந்த நாடும்) எழுப்பவில்லை என்று சிதம்பரம் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்