மும்பை பங்குச் சந்தை குறியீடு 17,150 ஆக உயர்வு!

Webdunia

வியாழன், 27 செப்டம்பர் 2007 (21:04 IST)
இந்திய பங்குச் சந்தைக்கு இன்று முக்கியமான நாள். மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண், தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் ஆகிய இரண்டுமே அதிகரித்தது.

மும்பை பங்குச் சந்தையின் 30 பங்குகளின் குறியீட்டு எண் 17,000 ஐ தாண்டியது. இந்த குறியீட்டு எண் இறுதியில் 17,150.56 புள்ளிகளில் முடிவடைந்தது. இது நேற்றைய குறியீட்டு எண் விட இது 229.17 புள்ளிகள் அதிகம்.

இதே போல் தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிப்டியும் 5000 புள்ளிகளை தாண்டி, இறுதியில் 5000.55 புள்ளிகளில் முடிவடைந்தது. இது ஒரு நேரத்தில் 5,016.40 புள்ளிகளாக அதிகரித்தது.

இந்திய பொருளாதாரம் தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வருவதால், எதிர்காலத்திலும் வளர்ச்சி இருக்கும் என்று அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் கருதுவதால், இந்திய பங்குச் சந்தைகளில் அதிகளவு முதலீடு செய்கிறன. ரூபாயின் மதிப்பு உயர்வு, சில பிரிவினருக்கு கவலையை ஏற்படுத்தினாலும், இந்த மாற்றம் இந்திய பொருளாதாரத்தின் பலத்தினால் நிகழ்கிறது என்பதை அறிந்துள்ளனர்.

அத்துடன் ரூபாயின் மதிப்பு உயர்வதால், பணவீக்கம் கட்டுப்படுத்தப்படுகிறது. இதனால் இறக்குமதிக்கான செலவு குறைகிறது. குறிப்பாக பெட்ரோலிய கச்சா எண்ணை இறக்குமதிக்கான செலவு குறைகிறது.

இன்று மும்பை பங்குச் சந்தையில் 1,274 நிறுவனங்களின் பங்குகள் விலை அதிகரித்தது. 1,457 நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்தது. 328 நிறுவனங்களின் பங்குகள் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை.

நடுத்தர நிறுவன பங்களின் குறியீட்டு எண், இதற்கு முன் இல்லாத அளவில் 7,437.51 புள்ளிகளையும், சிறு நிறுவன பங்குகளின் குறியீட்டு எண் 9,127.42 புள்ளிகளாக உயர்ந்தது.

இன்று மொத்தம் ரூ.7,720 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றது.

வெப்துனியாவைப் படிக்கவும்