மும்பை பங்குச் சந்தைக் குறியீடு 542 புள்ளிகள் சரிவு!

Webdunia

வெள்ளி, 27 ஜூலை 2007 (21:10 IST)
அந்நிய நேரடி முதலீட்டாளர்களும், உள்ளூர் பரஸ்பர நிதிய நிறுவனங்களும் பங்குகளை விற்றதன் விளைவாக இந்திய பங்குச் சந்தையில் இன்று பெரும் வீழ்ச்சி ஏற்பட்டது!

இன்று காலை 2 மணி நேர வர்த்தகத்தில் மட்டும் மும்பை பங்கு சந்தை 536 புள்ளிகள் குறைந்து 15,240 புள்ளிகளுக்குச் சரிந்தது.

தேச பங்குச் சந்தைக் குறியீடு 173 புள்ளிகள் சரிந்து 4,447 புள்ளிகளாகக் குறைந்தது.

சர்வதேசப் பங்குச் சந்தைகளான நாஸ்டாக், டவ்ஜோன்ஸ், நிக்கி, ஹாங்சிங் ஆகியவற்றில் ஏற்பட்ட வீழ்க்சி இந்தியப் பங்குச் சந்தைகளில் எதிரொலித்தது.

ஹெச்.டி.·ப்.சி., பெல். ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் ஆகியவற்றின் பங்குகளின் விலை 5 விழுக்காட்டிற்கும் அதிகமாகக் குறைந்தது.

இண்டால்கோ, ரிலையன்ஸ், டாட்டா ஸ்டீல்ஸ், எல் அண்ட் டி, ஸ்டேட் பேங்க், ஓ.என்.ஜி.சி. ஆகியவற்றின் பங்குகளும் சரிவைச் சந்தித்துள்ளன.

ரான்பாக்ஸி, ஐ.டி.சி. ஆகிய இரண்டு நிறுவனங்களின் பங்குகள் மட்டுமே உயர்ந்துள்ளன.

உலோக நிறுவனங்களான நால்கோ, ஜிண்டால், டாட்டா ஸ்டீல், செயில், இந்துஸ்தான் ஸிங் ஆகியவற்றின் பங்குகளின் விலை 7.5 விழுக்காடு வரை சரிந்துள்ளது.

சிமெண்ட் பங்குகளின் விலைகளும் பெருமளவிற்கு சரிந்துள்ளது.

இன்றைய வணிகத்தின் முடிவில் 541.74 புள்ளிகள், அதாவது நேற்றைய வணிக முடிவில் இருந்ததைவிட, 3.43 விழுக்காடு குறைந்து 15,230.21 புள்ளிகளாக மும்பை பங்குச் சந்தைக் குறியீடு சரிந்துள்ளது.

தேச பங்குச் சந்தைக் குறியீடு 174.60 புள்ளிகள் குறைந்து 4,445.20 புள்ளிகளாக சரிந்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்