வரி வழக்கில் வோடபோன் நிறுவனத்துக்கு சாதகமாக தீர்ப்பு

வெள்ளி, 20 ஜனவரி 2012 (18:59 IST)
வரி தொடர்பான வழக்கில்,வோடபோன் நிறுவனத்திற்கு சாதகமாக உச்ச நீதிம்ன்றம் இன்று தீர்ப்பளித்ததை தொடர்ந்து, நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

கடந்த 2007 ஆம் ஆண்டு ஹட்சிசன் நிறுவனத்திடமிருந்து அதன் 67 விழுக்காடு பங்குகளை பிரிட்டனை சேர்ந்த வோடபோன் நிறுவனம் வாங்கியது.

சுமார் 11.5 பில்லியன் டாலர் மதிப்பிலான இந்த ஒப்பந்தத்திற்காக 2,500 கோடி ரூபாய் வரி செலுத்த வேண்டும் எனக் கூறி வருமான வரித்துறை அந்த தொகையை வோடபோன் நிறுவனத்திடமிருந்து பிடித்துக் கொண்டது.

இதனை எதிர்த்து மும்பை உயர் நீதிமன்றத்தில் வோடபோன் நிறுவனம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கை விசாரித்த மும்பை உயர் நீதிமன்றம், வரி பிடித்தம் நியாயமானதே என்று தீர்ப்பளித்தது.

இதனையடுத்து இத்தீர்ப்பை எதிர்த்து வோடபோன் நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது.

இந்நிலையில்,இவ்வழக்கில் இன்று தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், வோடோபோன் நிறுவனத்துக்கு வருமான வரித்துறை 2,500 கோடி ரூபாயை 4 விழுக்காடு வட்டியுடன் திருப்பி தர வேண்டும் என உத்தரவிட்டது.

இந்த தீர்ப்பை தொடர்ந்து மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, சட்டத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்துடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து ஆலோசனை செய்ய வேண்டியுள்ளது. அரசின் முக்கிய திட்டங்களுக்கு வருவாய் தேவைப்படுகிறது.

இது குறித்து அனைத்து வழிகளிலும் ஆலோசனை செய்ய வேண்டியுள்ளது என பிரணாப் முகர்ஜி கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்