காய்கறிகள், பழ வகைகள் ஆகியவற்றின் விலைவாசி ஏறுமுகத்தில் இருந்தாலும், பருப்பு, கோதுமை, உருளைக் கிழங்கு ஆகியவற்றின் விலைகள் குறைந்ததால் உணவுப் பொருட்களுக்கான பணவீக்கம் ஜனவரி 8ஆம் தேதியுடன் முடிவுற்ற வாரத்தில் 15.52 விழுக்காடாக குறைந்துள்ளது.
டிசம்பர் 25ஆம் தேதியுடன் முடிவுற்ற வாரத்தில் 18.32 விழுக்காடாக அதிகரித்த உணவுப் பொருள் பணவீக்கம், ஜனவரி 1ஆம் தேதியுடன் முடிவுற்ற வாரத்தில் 16.91 விழுக்காடாக குறைந்தது. அடுத்த ஒரு வாரத்தில் மேலும் குறைந்து 15.52 விழுக்காடாக ஆகியுள்ளது.
வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளின் விலை கடந்த ஆண்டு இதே வாரத்துடன் ஒப்பிடுகையில் 65.39 விழுக்காடும், பழ வகைகளின் விலைகள் 15.91 விழுக்காடும், பால் 13 விழுக்காடும் அதிகரித்துள்ளது என்று மத்திய அரசின் புள்ளி விவரம் தெரிவிக்கிறது.
கடந்த ஆண்டு விலையோடு ஒப்பிடுகையில் பருப்பு வகைகள் விலை 14.92 விழுக்காடும், கோதுமை 6.11 விழுக்காடும், உருளைக்கிழங்கு 3 விழுக்காடும் குறைந்துள்ளன.