உணவுப் பொருள் பணவீக்கம் 16.91% ஆக குறைவு

வியாழன், 13 ஜனவரி 2011 (12:47 IST)
வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளின் விலை, மத்திய அரசு விடுத்த எச்சரிக்கைக்குப் பின் குறையத் தொடங்கியதன் விளைவாக, உணவுப் பொருட்களுக்கான பணவீக்கம் ஜனவரி 1ஆம் தேதியுடன் முடிவுற்ற வாரத்தில் 16.91 விழுக்காடாக குறைந்துள்ளது.

வெங்காயம், தக்காளி, வெள்ளைப் பூண்டு, பால், பழ வகைகள் ஆகியவற்றின் விலைகள் டிசம்பர் 25ஆம் தேதியுடன் முடிவுற்ற வாரத்தில் கடுமையாக உயர்ந்ததன் காரணமாக உணவுப் பொருட்களுக்கான பணவீக்கம் 18.32 விழுக்காடாக உயர்ந்தது. அதன் பிறகு மொத்த விலை வணிகர்களுக்கு மத்திய அரசு விடுத்த எச்சரிக்கையை அடுத்த விலைகள் குறைய ஆரம்பித்தது. அதன் விளைவாக ஜனவரி 1ஆம் தேதியுடன் முடிவுற்ற வாரத்தில் உணவுப்பொருள் பணவீக்கம் 1.41 விழுக்காடு குறைந்துள்ளது என மத்திய அரசு வெளியிட்ட புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

காய்கறிகளின் விலை குறைவால் உணவுப் பொருள் பணவீக்கம் குறைந்துள்ளதாக அரசு புள்ளி விவரம் கூறினாலும், கடந்த ஆண்டு இதே வாரத்துடன் ஒப்பிடுகையில் காய்கறிகளின் விலை 70.70 விழுக்காடு உயர்ந்துள்ளது.

கடந்த ஆண்டு விலையுடன் ஒப்பிடுகையில் முட்டை, ஆட்டுக் கறி, மீன் ஆகியவற்றின் விலை 16.70 விழுக்காடும், பால் விலை 13.20 விழுக்காடும், பழ வகைகளின் விலை 17.71 விழுக்காடும் அதிகரித்துள்ளன. பருப்பு வகைகளின் விலை மட்டும் 14 விழுக்காடு குறைந்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்