விண்ணை முட்டும் வெங்காயத்தின் விலையேற்றமும், மற்ற காய்கறிகளின் விலையேற்றும் உணவுப் பொருட்களுக்கான பணவீக்கத்தை டிசம்பர் 24ஆம் தேதியுடன் முடிவுற்ற வாரத்தில் சற்றேறக்குறைய 2 விழுக்காடு அதிகரித்துள்ளது.
டிசம்பர் 17ஆம் தேதியுடன் முடிவுற்ற வாரத்தில் 9.46 விழுக்காடாக இருந்த உணவுப் பொருட்களுக்கான பணவீக்கம், டிசம்பர் 24ஆம் தேதியுடன் முடிவுற்ற வாரத்தில் 12.13 விழுக்காடாக உயர்ந்துள்ளது. மூன்று வாரங்களுக்குப் பிறகு மீண்டும் இரட்டை இலக்கத்தை தாண்டியுள்ளது உணவுப் பொருளட்களுக்கான பணவீக்கம். வெங்காயத்தின் விலை கடந்த ஆண்டு விலையோடு ஒப்பிடுகையில் 33.48 விழுக்காடும், இந்த ஒரு வாரத்தில் 4.56 விழுக்காடும் அதிகரித்துள்ளது என அரசு புள்ளி விவரம் கூறுகிறது.
கடந்த ஆண்டு இந்த வாரத்தோடு ஒப்பிடுகையில், பழ வகைகள் 20.15 விழுக்காடும், பால் 17.83 விழுக்காடும், காய்கறிகள் 15.54 விழுக்காடும் அதிகரித்துள்ளதாகவும் அரசு புள்ளி விவரம் தெரிவிக்கிறது.
உணவுப் பொருட்களுக்கான பணவீக்கம் மீண்டும் அதிகரித்து வருவதையடுத்த கடன் மற்றும் வைப்பு நிதிகளின் மீதான வட்டி விகிதங்களை இந்திய மைய வங்கி மீண்டும் உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.