உணவுப் பொருள் பணவீக்கம் 9.46% ஆக உயர்வு

வியாழன், 16 டிசம்பர் 2010 (13:35 IST)
அரிசி, காய்கறிகள், பால், பழ வகைகள் ஆகியவற்றின் விலைகள் உயர்ந்ததன் காரணமாக டிசம்பர் 4ஆம் தேதியுடன் முடிவுற்ற வாரத்தில் உணவுப் பொருட்களுக்கான பணவீக்கம் 9.46 விழுக்காடாக அதிகரித்துள்ளது.

நவம்பர் 27ஆம் தேதியுடன் முடிவுற்ற வாரத்தில் 8.60 விழுக்காடாக இருந்த பணவீக்கம், ஒரே வாரத்தில் மீண்டும் கிட்டத்தட்ட ஒரு விழுக்காடு அளவிற்கு உயர்ந்துள்ளது.

அரிசி விலை 1.47 விழுக்காடும், காய்கறிகள் 1 விழுக்காடும், பால் விலை மிக அதிகமாக 17.76 விழுக்காடும், பழ வகைகளின் விலை 19.75 விழுக்காடும், பருப்பு வகைகள், கோதுமை ஆகியவற்றின் விலை முறையே 4.24, 11.46 விழுக்காடும் உயர்ந்துள்ளன.

உணவுப் பொருட்கள் மட்டுமின்றி, எரிபொருள்களின் விலையும் 10 விழுக்காடு அளவிற்கு உயர்ந்துள்ளதால், ரூபாயின் பணவீக்கமும் மீண்டும் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

3வது காலாண்டின் நாணயக் கொள்கை தொடர்பாக இந்திய மைய வங்கி முடிவு செய்யுவுள்ள நிலையில், மத்திய அரசின் புள்ளியியல் துறை வெளியிட்டுள்ள இந்த விவரங்கள், மைய வங்கி தலையீடு மீண்டும் இருக்கும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்