பூச்சி மருந்து கலப்பு: பெப்சிக்கு எதிரான சட்ட நடவடிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது

வியாழன், 18 நவம்பர் 2010 (15:43 IST)
பெப்சி குளிர்பானத்தில் பூச்சி மருந்து கலப்பு அதிகம் இருந்ததையடுத்து, அந்நிறுவனத்திற்கு எதிராக கேரள அரசு மேறகொண்ட சட்டபூர்வமான குற்றச்சாற்று நடவடிக்கையை இந்தியாவின் உச்ச நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.

அனுமதிக்கப்பட்ட அளவிற்கு அதிகமாக பெப்சி குளிர் பானத்தில் பூச்சி மருந்து கலப்பு இருந்தது என்ற குற்றச்சாற்றின் பேரில், அந்நிறுவனத்திற்கு எதிராக கேரள அரசு சட்ட நடவடிக்கையை தொடங்கியது. அதனை எதிர்த்து பெப்சி நிறுவனம் கேரள உயர் நீதிமன்றத்தை அணுகியது. ஆனால் கேரள அரசின் சட்டப்பூர்வமான நடவடிக்கைக்கு தடை விதிக்க முடியாது என்று உயர் நீதிமன்றம் பெப்சி மனுவை தள்ளுபடி செய்துவிட்டது.
இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பெப்சி நிறுவனம் மேல் முறையீடு செய்தது. இந்த மேல் முறையீட்டை உச்ச நீதிமன்ற நீதிபதி அல்டாமஸ் கபீர் தலைமையிலான நீதிமன்ற அமர்வு விசாரித்தது.

குளிர் பானங்களில் பூச்சி மருந்து கலப்பது என்பது பன்னாட்டு அளவில் நடைமுறையில் உள்ளது என்றும், குளிர் பானங்களில் பூச்சி மருந்து கலப்பது தொடர்பாக எந்த சட்ட வரையறையும் இல்லை என்றும் பெப்சி வாதிட்டது. உணவு கலப்புத் தடுப்புச் சட்டம் 1954, உணவுக் கலப்பட தடுப்பு விதிகள் 1955 ஆகியவற்றின் படி, குளிர் பானங்களில் எந்த அளவிற்கு பூச்சி மருந்து கலப்பு இருக்கலாம் என்பது குறித்து எந்த குறிப்பும் இல்லை என்றும் பெப்சி வாதிட்டது.

பெப்சியின் இந்த வாதம் அதற்கு சாதகமான தீர்ப்பை அளித்துள்ளது. உணவுக் கலப்படத் தடுப்புச் சட்டத்தில், குளிர் பானங்களில் நிர்ணயிக்கப்பட்ட அளவிற்கும் அதிகமாக பூச்சி மருந்து கலப்பு இருப்பது தொடர்பான அளவு ஏதும் குறிப்பிடப்படவில்லை என்பது வியப்பிற்குரியதாகும்.

குளிர் பானங்களில் பூச்சி மருந்து கலப்பு, மற்ற நாடுகளில் உள்ள அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் அதிகமாக உள்ளதென டெல்லியை மையமாகக் கொண்டு செயல்படும் சுற்றுச்சூழல் மற்றும் அறிவியல் மையம் ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டது. அதன் அறிக்கையை அடுத்து அது குறித்து ஆராய கூட்டு நாடாளுமன்றக் குழு அமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்