பணவீக்கத்தை கட்டுப்படுத்த மேலும் நடவடிக்கை: பிரணாப் முகர்ஜி

திங்கள், 9 ஆகஸ்ட் 2010 (21:02 IST)
ரூபாயின் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த அத்யாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வது, நிதி, பணப் புழக்கத்தை கட்டுப்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளும் என்று நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.

தனியார் வணிக தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறியுள்ள நிதியமைச்சர், பணவீக்க நிலை தொடர்பாக மைய வங்கி (ஆர்பிஐ) தொடர்ந்து கண்காணித்து வருகிறது என்றும், உரிய நடவடிக்கைகளை மைய வங்கி எடுக்கும் என்றும் கூறியுள்ளார்.

“பணப்புழக்கத்தை மைய வங்கி தொடர்ந்து கண்காணித்து வருகிறது. சந்தையில் போதுமான அளவிற்கு உணவுப் பொருட்கள் கிடைக்கும் வண்ணம் அத்யாவசியப் பொருட்கள் இறக்குமதி செய்யப்படும். உள்நாட்டில் உணவுப் பற்றாக்குறை ஏற்படாமல் தவிர்க்க பாஸ்மதி அல்லாத அரசி, கோதுமை, சர்க்கரை ஆகியவற்றை ஏற்றுமதி செய்வதற்கு அரசு தடை விதித்துள்ளது. ஆனால் தேவைப்பட்டால் பருப்பு, உணவு எண்ணெய் ஆகியன இறக்குமதி செய்யப்படும்” என்று கூறியுள்ளார்.

ஏற்கனவே குறைந்த கடன் வாங்கல், பெறுதல் ஆகியவற்றின் மீதான வட்டி விகிதத்தை உயர்த்திய மைய வங்கி மீண்டும் அப்படிப்பட்ட நடவடிக்கை எடுக்கலாம் என்று தெரிகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்