மத்திய வர்த்தக அமைச்சகத்துக்கு கீழ் இயங்கும், பி.இ.சி லிமிடெட் நிறுவனம் 12 ஆயிரம் டன் பாமாயில் இறக்குமதி செய்ய உள்ளது.
உள்நாட்டு பற்றாக்குறையை ஈடு செய்ய அயல்நாடுகளில் இருந்து சமையல் எண்ணெய் இறக்குமதி செய்யப்படுகிறது. இவற்றை அரசுத் துறை நிறுவனங்களான எஸ்.டி.சி., எம்.எம்.டி.சி., பி.இ.சி போன்றவை இறக்குமதி செய்கின்றன. இவ்வாறு இறக்குமதி செய்யப்படும் சமையல் எண்ணெய், குறிப்பாக பாமாயில் ரேஷன் கடைகளில் மானிய விலையில் விற்பனை செய்யப்படுகின்றது. அத்துடன் வெளிசந்தையிலும் மொத்த வியாபாரிகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
பி.இ.சி லிமிடெட் 12 ஆயிரம் டன் பாமாயில் வாங்குதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மலேசியா, இந்தோனிஷியாவில் உற்பத்தியான பாமாயிலாக இருக்க வேண்டும். ஜுன் மாதம் வழங்க வேண்டும். இதை சென்னை, தூத்துக்குடி துறைமுகங்களில் ஒப்படைக்க வேண்டும்.
பாமாயில் வழங்குவதற்கான விலைப்புள்ளியை மே 14 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இவை பரிசீலிக்கப்பட்டு மே 17 ஆம் தேதி முடிவு செய்யப்படும் என்று பி.இ.சி தெரிவித்துள்ளது.