நானோ கார் முன்பதிவு துவக்கம்

சனி, 7 பிப்ரவரி 2009 (11:51 IST)
டாடா நிறுவனத்தின் ஒரு லட்சம் ரூபாய் கார் "நானோ” கார்களுக்கான முன்பதிவு, இந்த மாத கடைசியில் தொடங்குகிறது.

நானோ காரை வாங்க விரும்புபவர்கள் ரூ.70 ஆயிரம் முன்பணமாக செலுத்த வேண்டும்.

இதற்கான முன்பதிவு டாடா மோட்டார் நிறுவனத்தின் விற்பனையாளர்கள், பாரத ஸ்டேட் வங்கி கிளைகளில் செய்து கொள்ளலாம். முதலில் பாரத ஸ்டேட் வங்கியின் 100 கிளைகளில் முன்பதிவு துவக்கப்படும். பிறகு படிப்படியாக ஆயிரம கிளைகளில் நானோவுக்கு முன்பதிவது விரிவுபடுத்தப்படும். இதற்கான ஒப்பந்தம் டாடா மோட்டார் நிறுவனத்திற்கும், பாரத ஸ்டேட் வங்கிக்கும் இடையே ஏற்பட்டுள்ளது. இந்த வங்கி நானோ கார் வாங்க கடனும் வழங்கும்.

டாடா நிறுவனம் 1 லட்சம் நானோ காருக்கு முன்பதிவு செய்யப்படும் என்று எதிர்பார்க்கிறது. இதன் மூலம் ரூ.700 கோடி வரை வசூலாகும் என்று எதிர்பார்கிறது. நானோ கார் முன்பதிவு செய்து கொண்டவர்களில், குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு, வரிசையாக கார் வழங்கப்படும் என்று தெரிகிறது.

டாடா குழுமத்தின் சேர்மன் ரத்தன் டாடாவின் ரூ. 1 லட்சம் நானோ கார் திட்டம் அறிவித்த உடனேயே, இந்தியாவில் மட்டுமல்லாது, மற்ற நாடுகளிலும் பரபரப்பையும், பொதுமக்களிடையே எதிர்பார்ப்பையும் உருவாக்கியது.

அப்போது ரத்தன் டாடா, இந்தியாவில் நடுத்தர வருவாய்ப் பிரிவினரும் கார் வாங்க வேண்டும் என்பதற்காக ரூ. 1 லட்சம் விலையில் காரை அறிமுகப்படுத்தப் போவதாக அறிவித்தார்.

புது டெல்லியில், சென்ற ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற சர்வதேச ஆட்டோமொபைல் கண்காட்சியில், நானோ காரை ரத்தன் டாடா அறிமுகப்படுத்தினார்.

இந்தக் கார் தயாரிப்பதற்கான தொழிற்சாலைக்கு, மேற்கு வங்க மாநிலம் சிங்கூரில் இடம் ஒதுக்கப்பட்டது. அங்கு தொழிற்சாலைக்கான கட்டுமானப் பணிகள் நடக்கும் நிலையில், விவசாயிகளிடம் இருந்து பலவந்தாமாக விளை நிலங்கள் பிடுங்கப்பட்டு, டாடா நிறுவனத்திற்கு கொடுப்பதை அனுமதிக்க மாட்டோம் என்று முக்கிய எதிர்க்கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டது.

இதன் தலைவர் மம்தா பானர்ஜி, மற்ற பல்வேறு அமைப்புகளும் கடை அடைப்பு, சாலை மறியல் என பல்வேறு போராட்டங்களை நடத்தினார்கள்.

மேற்கு வங்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முதலமைச்சர் புத்த தேவ் பட்டாச்சார்யாவின் முயற்சிகள் பலனளிக்கவில்லை. இறுதியில். நானோ கார் தொழிற்சாலை, மேற்கு வங்க மாநிலத்திலிருந்து, குஜராத்துக்கு மாற்றும் முடிவை ரத்தன் டாடா வெளியிட்டார்.

இந்நிலையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புனே நகர் வாகன உற்பத்தி தொழிற்சாலை, உத்தரகான்ட் மாநிலத்தில் பந்த் நகரில் உள்ள வாகன உற்பத்தி தொழிற்சாலை ஆகியவற்றில் நானோ கார் தயாரிக்கப்படுகிறது.

டாடா குழுமத்தின் நிறுவனர் ஜம்ஷெட் ஜே.ஆர்.டி டாடாவின் பிறந்த நாள் மார்ச் மாதம் 3 ஆம் தேதி. அன்று நானோ காரின் விற்பனையை துவக்கப்படும் என்று தெரிகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்