சத்யம் கம்ப்யூ ராமலிங்க ராஜு பிணை மனு விசாரணை ஒத்திவைப்பு
திங்கள், 19 ஜனவரி 2009 (16:38 IST)
சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனத்தின் முன்னாள் சேர்மன் ராமலிங்கராஜு மற்றும் இருவரின் பிணை மனு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனத்தின் முன்னாள் சேர்மன் ராமலிங்க ராஜு, அவரின் தம்பியும் மேலாண்மை இயக்குநராக இருந்த ராம ராஜு, முன்னாள் தலைமை நிதி அதிகாரி சீனிவாஸ் வடால்மணி ஆகியோரை ரூ.7000 கோடி அளவிற்கு கணக்குகளில் முறைகேடு செய்ததாக, ஆந்திர மாநில சி.பி-சி.ஐ.டி காவல்துறையினர் கைது செய்தனர்.
இவர்கள் சார்பாக தாக்கல் செய்யப்பட்ட பிணை மனு, ஹைதராபாத் பெருநகர 6 வது மாஜிஸ்திரேட் நீதி மன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அத்துடன் இவர்களை விசாரிக்க அனுமதி கேட்டு பங்குச் சந்தையை கட்டுப்படுத்தும் அமைப்பான செபி தாக்கல் செய்த மனுவும் விசாரணாக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
அத்துடன் ராமலிங்க ராஜுவும், மற்ற இருவரும், தங்களுக்கு சிறையில் சிறப்பு பிரிவில் அடைக்க வேண்டும் என்று கோரி, அவர்கள் சார்பில் வழக்கறிஞர் தாக்கல் செய்த மனுவும் விசாரணைக்கு வந்தது.
இந்த மூன்று மனுக்களையும் விசாரித்த நீதிபதி பி.ராமகிருஷ்ணா, இதன் மீதான அடுத்த கட்ட விசாரணையை வரும் 22 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
முன்னாதாக இந்த மூவரையும் வருகின்ற 23 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டு இருந்தார்.
முன்னதாக இதே நீதி மன்றத்தில் சி.பி-சி.ஐ.டி காவல் துறையினர், இவர்களிடம் விசாரணை நடத்த 6 நாட்கள், தங்கள் பொறுப்பில் எடுத்துக் கொள்ள அனுமதி கேட்டு சனிக்கிழமை மனு தாக்கல் செய்திருந்தனர். இவர்களிடம் வருகின்ற 22 ஆம் தேதி வரை, நான்கு நாட்கள் மட்டும், காவல் துறையினர் விசாரணா நடத்தலாம். அத்துடன் இவர்களது வழக்கறிஞர் முன்னிலையில் மட்டுமே விசாரணை நடத்த வேண்டும். பகலில் மட்டும் விசாரணை நடத்த வேண்டும் என்ற நிபந்தனை விதித்து அனுமதி அளித்திருந்தார்.
ராமலிங்க ராஜு, மற்ற மூவரிடமும் காவல்துறை 22 ஆம் தேதி வரை விசாரணை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
காவல் துறை பொறுப்பு விசாரணை முடிந்த பிறகு, இவர்களின் பிணை மனு, செபி விசாரணை நடத்த அனுமதி கோரி தாக்கல் செய்துள்ள மனுக்களின் மீது 22 ஆம் தேதி விசாரணை நடைபெறும்.
இந்நிலையில் இன்று ஆந்திர உயர்நீதி மன்றத்தில், காவல் துறை விசாரணைக்கு அனுமதி அளிக்கப்பட்டதை நீக்க கோரி, ராமலிங்க ராஜு, மற்ற இருவரின் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.