புது டெல்லி: மத்திய அரசு நேற்று பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுகாணவும், வளர்ச்சியை அதிகப்படுத்த வழங்கிய சலுகைகளை தொழில், வர்த்தக சங்கங்கள் வரவேற்றுள்ளன.
பிக்கி, சி.ஐ.ஐ ஆகிய இரண்டு மத்திய சங்கங்களும் அரசின் சலுகைகளையும், ரிசர்வ் வங்கியின் வட்டி குறைப்பையும் பாராட்டியுள்ளன.
அதே நேரத்தில் மற்றொரு மத்திய சங்கமான அசோசெம், மத்திய அரசிடம் இருந்து அதிகம் எதிர்பார்த்தாக கூறியுள்ளது.
ஆனால் ஏற்றுமதியாளர்கள் ஏமாற்றம் அடைந்திருப்பதாக தெரிவித்தனர்.
சி.ஐ.ஐ பொதுச் செயலாளர் சந்திரஜிட் பானர்ஜி கூறுகையில், இந்த உதவிகள் சரியான நேரத்தில் அறிவிக்கப்பட்டுள்ளன. அடுத்த மூன்று மாதங்களுக்கு தேவையான நிதி, கடன் உதவி கிடைக்கும். ரிசர்வ் வங்கி ரிபோ, ரிவர்ஸ் ரிபோ வட்டி விகிதத்தை குறைத்துள்ளது. அதே போல் வங்கிகளின் ரொக்க கையிருப்பு விகிதத்தையும் குறைத்துள்ளது. இதனால் வங்கிகள் அதிக அளவு கடன் வழங்க முடியும். அத்துடன் வட்டியும் குறையும் என்று கூறியுள்ளார்.
பிக்கி பொதுச் செயலாளர் அமித் மிர்தா கூறுகையில், மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் அதிக அளவு அக்கறை எடுத்துக் கொண்டு நடவடிக்கைகளை எடுத்துள்ளன. இதனால் மந்தகதியில் உள்ள பொருளாதாரம் புத்துயிர் அடையும். இவற்றால் வர்த்தகம் தொடர்ந்து நடக்கும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது.
அதே நேரத்தில் வங்கிகள், அவைகளிடம் உள்ள பணத்தை அரசு கடன் பத்திரங்களில் முதலீடு செய்வதை தவிர்க்க வேண்டும். அவை தொழில் துறையினருக்கு கடன் வழங்க முன் வரவேண்டும் என்று கூறியுள்ளார்.
அசோசெம் பொதுச் செயலாளர் டி.எஸ்.ரவாத் கூறுகையில், இது சரியான நடவடிக்கைதான். ஆனால் எதிர்பார்த்த அளவு இல்லை. மத்திய அரசு ரூ.1 லட்சம் கோடி வரை சலுகை வழங்கும் என்று எதிர்பார்த்தோம் என்று கூறியுள்ளார்.
ஏற்றுமதியாளர்கள் தரப்பு சார்பில் இந்திய ஏற்றுமதி கூட்டமைப்பு தலைவர் ஏ.சக்திவேல் கூறுகையில், இவை ஏற்றுமதியாளர்களுக்கு திருப்தி அளிக்கும் வகையில் இல்லை. டி.பி.இ.பி திட்டத்தின் படி வரி திரும்ப பெறும் காலத்தை அதிகரித்துள்ளது தவிர, மத்திய அரசு ஏற்றுமதியாளர்களை கோரிக்கைகள் பற்றி அக்கறை செலுத்தவில்லை என்று கூறியுள்ளார்.