நெருக்கடி தீர அரசின் சலுகை

சனி, 3 ஜனவரி 2009 (12:09 IST)
புது டெல்லி: பொருளாதார நெருக்கடியை தீர்ப்பதற்கும், வளர்ச்சிக்கு புத்துயிர் ஊட்ட மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் நேற்று சில சலுகைகளை அறிவித்தன.

முன்னதாக ரிசர்வ் வங்கி வங்கிகளுக்கு கொடுக்கும் குறுகிய கால கடனுக்கான (ரிபோ) வட்டியை 6.5% இல் இருந்து 5.5% ஆக குறைத்தது. இதே போல் வங்கிகள் உபரி நிதியை, ரிசர்வ் வங்கியில் இருப்பாக வைக்கும் குறுகிய கால வைப்புத் தொகைக்கான (ரிசர்வ் ரிபோ) வட்டியையும் 5% இல் இருந்து 4% விழுக்காடாக குறைத்தது.

இத்துடன் வங்கிகளின் ரொக்க கையிருப்பு விகிதத்தையும் (சி.ஆர்.ஆர்) அரை விழுக்காடு குறைத்தது. இதன் மூலம் நிதி சந்தையில் ரூ.20 ஆயிரம் கோடி பணப்புழக்கம் ஏற்படும்.

ரிசர்வ் வங்கி ஏற்கனவே ரிபோ வட்டி விகிதத்தை 2.5% குறைத்துள்ளது. இதே போல் ரிவர்ஸ் ரிபோ வட்டி விகிதத்தை 2 விழுக்காடு குறைத்துள்ளது. இதே போல் ரொக்க கையிருப்பு விகிதத்தையும் 4 விழுக்காடு குறைத்துள்ளது.

மத்திய திட்டக் குழு துணைத் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா நேற்று அரசின் பொருளாதார உதவிகள் பற்றி செய்தியாளர்களிடம் கூறுகையில், அந்நிய முதலீட்டு நிறுவனங்கள், கார்ப்பரேட் பாண்ட் எனப்படும் நிறுவன கடன் பத்திரங்களில் 15 பில்லியன் டாலர் வரை முதலீடு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு 6 பில்லியன் டாலர் வரை மட்டுமே கடன் பத்திரங்களில் முதலீடு செய்ய அனுமதி வழங்கப்பட்டு இருந்தது.

இதே போல் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் ஒருங்கினைக்கப்பட்ட நகரியம் அமைப்பதற்கு, அந்நிய நாடுகளில் இருந்து கடன் பெறலாம்.

வங்கிசார நிதி நிறுவனங்கள், வாகனங்கள் வாங்க கடன் வழங்குகின்றன. இவ்வாறு வழங்கும் கடனில் ஒரு பகுதியை, வங்கிசார நிதி நிறுவனங்கள் மற்ற வங்கிகளிடம் இருந்து கடன் பெறுகின்றன. தற்போது உள்கட்டமைப்பு திட்டங்களுக்காக கடன் வழங்கும் வங்கிசார நிதி நிறுவனங்கள், அந்நிய வங்கி, நிதி நிறுவனங்களிடம் இருந்து நேரடியாக கடன் வாங்க அனுமதிக்கப்படும்.

தற்போதைய நெருக்கடியான நிலையில், வங்கிகள் கடன் கொடுக்கும் இலக்கை, நிதி அமைச்சகம் விரைவில் அதிகரிக்கும் என மான்டேக் சிங் அலுவாலியா தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்