புது டெல்லி: ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரையிலான மூன்று மாதங்களுக்கு, வெளிசந்தையில் 50 லட்சம் டன் சர்க்கரை விற்பனை செய்வதற்கு, சர்க்கரை ஆலைகளுக்கு அனுமதி வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதன்படி ஜனவரி மாதத்தில் 17 லட்சம் டன், பிப்ரவரியில் 16 லட்சம் டன், மார்சசில் 17 லட்சம் டன் சர்க்கரை விற்பனை செய்ய அனுமதி வழங்கப்படும்.
மத்திய அரசு ஏற்கனவே ஜனவரி மாதம் வெளி சந்தை விற்பனைக்கு 2.01 லட்சம் டன் சர்க்கரைக்கு அனுமதி வழங்கியுள்ளது தற்போது அறிவித்துள்ளதையும் சேர்த்து ஜனவரி மாதத்தில் 19.01 லட்சம் டன் சர்க்கரை விற்பனை செய்யப்படும்.
மத்திய அரசு அறிவித்துள்ள அளவு சர்க்கரையை, ஆலைகள் விற்பனை செய்யாவிட்டால், அவை அரசு பொது விநியோக முறையில் வழங்க எடுத்துக் கொள்ளும்.
மத்திய அரசு வெளிச்சந்தையில் சர்க்கரை விலையை உன்னிப்பாக கவனித்து வருகிறது. இதன் விலை அதிகரித்தால், கூடுதல் அளவு சர்க்கரை விற்பனை செய்ய அனுமதிக்க தயங்காது என்று அறிவித்துள்ளது.