சண்டிகர்: சீனாவுக்கும், இந்தியாவுக்கும் இடையிலான வர்த்தகம் பல மடங்கு உய்ர்ந்திருப்பதாக சீன தூதர் ஹாங் யான் பெருமிதத்துடன் கூறினார்.
பஞ்சாப், ஹரியானா, டெல்லி வர்த்தக சங்கத்தைச் சேர்ந்த ( PHD Chamber of commerce) உயர் அதிகாரிகளிடம் சீன தூதர் ஹாங் யான் உரையாற்றினார்.
அவர் அப்போது, 2007 ஆம் ஆண்டில் இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம் 38.7 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. இது 1995 ஆம் ஆண்டு நடந்த வர்த்தகத்துடன் ஒப்பிடுகையில் 33 மடங்கு உயர்வு. இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம் சராசரியாக வருடத்திற்கு 34 விழுக்காடு அதிகரித்துள்ளது. சீனாவுடன் அதிக அளவு வர்த்தகம் செய்யும் நாடுகளில், இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது என்று கூறினார்.
அவர் மேலும் பேசுகையில், இந்தியாவும், சீனாவும் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியின் தாக்கம் குறைந்த அளவு இருக்கும் படி, தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டும். இரு நாடுகளும் வர்த்தகம் உட்பட பல்வேறு துறைகளில் இணைந்து பணியாற்றுவதுடன், ஒருவரிடம் இருந்து மற்றவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறினார்.
இந்த வர்த்தக சங்கத்தின் ஹரியான மாநில இணை தலைவர் பிரனேவ் குப்தா பேசுகையில், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் 2008 ஆம் ஆண்டு 20 பில்லியன் டாலராக இருக்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் இரு வருடங்களுக்கு முன்னரே இலக்கை எட்டி விட்டோம். 2010 ஆம் ஆண்டு வர்த்தம் 40 பில்லியன் டாலராக உயர வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த இலக்கையும் இரண்டு வருடங்களுக்கு முன்னரே எட்டிவிட முடியும் என்று கூறினார்.