மும்பை: பொதுத் துறை வங்கிகள், வீட்டு வசதி கடன், சிறு குறுந் தொழில்களுக்கு கொடுக்கும் கடனுக்கான வட்டியை குறைத்துள்ளன.
இந்த வட்டி குறைப்பு பற்றி பாரத ஸ்டேட் வங்கியின் சேர்மன் ஒ.பி.பத் கூறுகையில், ரூ.5 லட்சம் வரையிலான வீட்டு வசதி கடனுக்கான வட்டி 8.5 விழுக்காடாக குறைக்கப்பட்டுள்ளது.
அதே போல் ரூ.5 லட்சம் முதல் ரூ. இருபது லட்சம் வரையிலான வீட்டு வசதி கடனுக்கான வட்டி 9.25 விழுக்காடாக குறைக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய வட்டி விகிதம் நாளை முதல் அமலுக்கு வரும். இது 2009 ஆம் ஆண்டு ஜீன் 30 ஆம் தேதி வரை அமலில் இருக்கும். 20 வருடங்களுக்கான வீட்டு வசதி கடன்களுக்கு, முதல் 5 வருடம் எவ்வித வட்டி மாற்றமும் செய்யப்பட மாட்டாது.
குறுந்தொழில் பிரிவுகளுக்கான வட்டி விகிதம் 1 விழுக்காடு குறைக்கப்பட்டுள்ளது. இது ஏற்கனவே வாங்கிய கடனுக்கும், புதிய கடனுக்கும் பொருந்தும்.
சிறு, நடுத்தர தொழில் பிரிவுக்கான கடன் அரை விழுக்காடு குறைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வட்டி ரூ.10 கோடி வரையிலான கடனுக்கு பொருந்தும். நவம்பர் 30 ஆம் தேதியன்று உள்ள வட்டி விகிதத்தை அடிப்படையாக வைத்து, புதிய வட்டி விகிதம் கணக்கிடப்படும். தற்போது குறைத்துள்ள அரை விழுக்காடு வட்டி குறைப்பு உடனடியாக அமலுக்கு வருகிறது.
தற்போதைய பொருளாதார மந்த நிலையை மாற்றி, புத்துயிர் ஊட்ட மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளன. பொதுத்துறை வங்கிகள் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் ரியல் எஸ்டேட், சிறு, குறுந் தொழில்கள், ஏற்றுமதி ஆகிய துறைகளுக்கு வட்டியை குறைத்துள்ளன.
பொதுத்துறை வங்கிகளில் வாங்கியுள்ள வீட்டு வசதி கடனில் 83 விழுக்காடு கடன்கள், அதிகபட்சமாக ரூ.20 லட்சத்திற்குள் வாங்கிய கடனாக இருக்கிறது.
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள சலுகையால், அடுத்த ஆண்டு ஜீன் மாதத்திற்குள் ரூ.20 ஆயிரம் கோடிவரை கடன் கொடுக்க முடியும். இதனால் கட்டுமான துறையில் ரூ.30 ஆயிரம் கோடி வரை பணப்புழக்கம் ஏற்படும்.
இதன் பயனாக உருக்கு, இரும்பு உற்பத்தி, சிமெண்ட் உற்பத்தி துறைகள் பயன் அடைவதுடன், கட்டுமான துறையில் வேலை வாய்ப்பும் அதிகரிக்கும்.
நாட்டின் வளர்ச்சிக்கும், சமுதாய வங்கிகளாக உள்ள பொதுத்துறை வங்கிகள், சமுதாயத்தின் குறிப்பாக மக்களுக்கு நியாயமான வட்டியில் கடன் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று கூறினார்.
இந்திய வங்கிகள் சங்க சேர்மன் டி.என்.நாராயணசாமி கூறுகையில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள கடன் குறைப்பு, 2009 ஜீன் 30 ஆம் தேதி வரை வாங்கும் கடனுக்கே பொருந்தும். ஏற்கனவே வாங்கியுள்ள கடனுக்கு பொருந்தாது.
அதிகபட்சமாக 20 வருடங்களில் திருப்பி செலுத்தும் வகையில் வாங்கும் ரூ.5 லட்சத்திற்கு உட்பட்ட வீட்டு வசதி கடனுக்கு, முதல் ஐந்து வருடங்களுக்கு அதிகபட்சமாக 8.5 விழுக்காடு வட்டி இருக்கும்.
இதே போல் ஐந்து லட்சத்திற்கும் அதிகமாகவும், ரூ.20 லட்சத்திற்குள் உள்ள கடனுக்கான வட்டி அதிகபட்சமாக 9.25 விழுக்காடாக இருக்கும்.
இந்த புதிய வட்டி விகிதம் கடனில் முதல் தவணை திருப்பி கட்டுவதில் இருந்து ஐந்து வருடங்களுக்கு மட்டும் பொருந்தும். அதன் பிறகு கடன் வாங்கியவர்கள் நிரந்தர வட்டி அல்லது மாறும் வட்டி விகிதத்திற்கு மாறலாம்.
இதில் ரூ.5 லட்சம் வரையிலான கடனுக்கு, முன்வைப்பு தொகையாக (மார்ஜின் மணி) 10 விழுக்காடும், ரூ. ஐந்து லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சம் வரையிலான கடனுக்கு முன்வைப்பு தொகை 15 விழுக்காடு செலுத்த வேண்டும். இவற்றிற்கு விண்ணப்பம் பரிசீலணை கட்டணம், கடன் நிலுவை காலத்திற்கு முன்னரே திருப்பி செலுத்தினால் எவ்வித கட்டணமும் வசூலிக்கப்பட மாட்டாது. கடன் வாங்குபவர்களுக்கு இலவசமாக ஆயுள் காப்பீடு செய்யப்படும் என்று கூறினார்.