பாதுகாப்பு துறையில் அந்நிய நேரடி முதலீடு அதிகரிக்க வேண்டும்-அசோசெம்

செவ்வாய், 16 டிசம்பர் 2008 (15:50 IST)
புது டெல்லி: பாதுகாப்பு துறைக்கு தேவையான போர் தளவாடங்கள், கருவிகள் உற்பத்தி செய்யும் நிறுவனங்களில் அந்நிய நேரடி முதலீட்டை 49 விழுக்காடாக அதிகரிக்க வேண்டும் என்று அசோசெம் கூறியுள்ளது.

அசோசெம் என்று சுருக்கமாக அழைக்கப்படும், அசோசெயட் சேம்பர் ஆப் காமர்ஸ் அண்ட் இண்டஸ்டிரிஸ் ஆப் இந்தியா என்ற வர்த்தக மற்றும் தொழில் சங்கங்களின் அமைப்பு பொதுச் .செயலாளர் டி.எஸ்.ரவாட் கூறுகையில், பாதுகாப்பு துறைக்கு தேவையான கருவிகள், போர் தளவாடங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களில், தற்போது அந்நிய நேரடி முதலீடு 26 விழுக்காடு அனுமதிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டில் பாதுகாப்பு துறை தொடர்புடைய தொழில் நிறுவனங்களுக்கு, நவீன தொழில் நுட்ப மாற்றம் ஏற்படுவதற்கும், அவை இந்தியமயமாகுவதற்கும் அந்நிய நேரடி முதலீட்டை 49 விழுக்காடாக அதிகரிக்க வேண்டும்.

இந்தியா 1999 ஆம் ஆண்டு கார்கில் போர் நடந்ததில் இருந்து, இதுவரை 25 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஆயுதங்களை இறக்குமதி செய்துள்ளது. இந்த இறக்குமதி 2012 ஆம் ஆண்டில் 30 பில்லியன் டாலராக அதிகரிக்கும். எனவே பாதுகாப்பு துறை சார்ந்த ஆயுத உற்பத்தியில் தன்னிறைவு அடைவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

உலக அளவில், இந்தியா அதிக அளவு ஆயுதங்களை இறக்குமதி செய்யும் நாடாக உள்ளது.

அதே போல் இந்தியாவில் அதிக அளவு தொழில் நிறுவனங்கள் உள்ளன. மத்திய அரசு 2006, 2008 ஆம் ஆண்டுகளில் அறிமுகப்படுத்தி உள்ள ஆயுத கொள்முதல் கொள்கை, இங்குள்ள தொழில் நிறுவனங்கள் தொழில் நுட்பத்தை மேம்படுத்தவும், உற்பத்தி அதிகரிக்கவும் உதவும். அத்துடன் இவை உள்நாட்டு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு துறையில் முதலீடு அதிகரிக்கவும் வாய்ப்பாக அமையும்.

இந்த புதிய கொள்முதல் கொள்கையால் 11 வது ஐந்தாண்டு திட்ட காலத்தில் 10 பில்லியன் டாலர் முதலீடு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்நிய நிறுவனங்கள், இந்திய நிறுவனங்களில் இருந்து ஏற்றுமதி செய்யும் ஆயுதம், கருவிகளின் மதிப்பில் 30 விழுக்காடு, உள்நாட்டில் செலவழிக்க வேண்டும். இந்த கொள்கையால் பாதுகாப்பு துறை கொள்முதலில் தனியார் நிறுவனங்களும் பங்கேற்கும் வாய்ப்பு ஏற்படும். அத்துடன் ஆயுதங்கள், கருவிகள் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு திட்டங்களுக்கான முதலீடும் அதிகரிக்கும் என்று அசோசெம் கூறியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்