புது தில்லி: துபாயில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறவுள்ள, சர்வதேச உலக கிராம கண்காட்சியில், மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் கலந்து கொள்கிறது.
இது கிராம கைவினைக் கலைஞர்களுக்கு, கலை, கைவினை மற்றும் கைத்தறி பொருட்களை, உலகச் சந்தையில் அறிமுகப்படுத்துவதற்கு நல்ல வாய்ப்பாகும். இந்தச் சந்தை சில்லறை விற்பனை சந்தையாகும்.
அத்துடன் இந்த கண்காட்சிக்கு வரும் பல்வேறு நாட்டு வர்த்தகர்களிடமிருந்து ஏற்றுமதி தொடர்புகள் கிடைக்கவும், பொது மக்களிடையே தங்களது பொருட்கள் பற்றிய விவரங்களை விளம்பரப்படுத்தவும் நல்ல வாய்ப்பாக அமையும்.
இந்த கண்காட்சியில் இடம் பெறச் செய்வதற்காக இந்திய கலை, கைவினை, ஜவுளி, பரிசுப் பொருட்கள், அலங்கார நகைகள் உள்ளிட்ட பொருட்கள் பற்றிய விவரங்களை அனுப்புமாறு அந்தந்த மாநில அரசுகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.
அடுத்த ஆண்டு ஜனவரி மாத மத்தியில் துபாயில் நடைபெறவுள்ள இந்த சர்வதேச கண்காட்சியில், மாநில அரசு அதிகாரிகளும், எஸ்.ஜி.எஸ்.ஓய் திட்டத்தின் பயனாளிகள் இரண்டு பேரும் கலந்து கொள்வார்கள்.