உற்பத்தி வரி குறைப்பு பரிசீலனை-சிதம்பரம்.

செவ்வாய், 18 நவம்பர் 2008 (14:55 IST)
புது டெல்லி: வாகன உற்பத்தியாளர்கள், ரியல் எஸ்டேட் நிறுவனங்கள், விமான போக்குவரத்து நிறுவனங்கள் போன்றவை விலை, கட்டணத்தை குறைக்க வேண்டும் என்றும், பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள துறைகளுக்கு உற்பத்தி வரியை குறைப்பது பற்றி பரிசீலிப்பதாக மத்திய நிதி அமைச்சபர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

புதுடெல்லியில் இந்திய தொழில் கூட்டமைப்பும் (CII), உலக பொருளாதார அமைப்பும் (World Economic Forum) இணைந்து இந்திய பொருளாதார மாநாட்டை நடத்துகின்றன.

இதில் பேசும் போது சிதம்பரம், தங்கும் விடுதிகள், விமான போக்குவரத்து நிறுவனங்கள் கட்டணத்தை குறைக்க வேண்டும். ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் குடியிருப்பு விலையை குறைக்க வேண்டும்.

இதே போல் கார், இருசக்கர வாகனத்தை தயாரிக்கும் நிறுவனங்களும் விலையை குறைக்க வேண்டும்.

தற்போது நுகர்வோர் செலவழிப்பது குறைந்துள்ளது. இதனால் உற்பத்தியை குறைக்க வேண்டியதுள்ளது. மற்ற துறைகளிலும் வளர்ச்சி குறைந்து பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படும். விலைகளை குறைப்பதன் மூலம், நுகர்வோர் செலவழிப்பது அதிகப்படுத்தலாம்.

எந்த துறையாவது பாதிக்கப்பட்டு இருந்தால், நான் உற்பத்தி வரியை குறைக்கும் யோசனையை பரிசீலிக்க தயாராக உள்ளேன்.

இந்த நிதி ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி திருப்பதிகரமாக இருக்கும். அடுத்த வருடத்தில் உள்நாட்டு மொத்த உற்பத்தி வளர்ச்சி மீண்டும் அதிகரிக்கும் என்று கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்