கடன்களுக்கான வட்டியை குறைப்பதற்கு ஒப்புக்கொண்ட நிலையில், பாரத் ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) 0.75 விழுக்காடு வட்டியை குறைத்துள்ளது.
வெளிநாட்டு வங்கியான சிட்டி வங்கி மற்றும் மேலும் 4 பொதுத்துறை வங்கிகளும் வட்டி விகிதத்தை குறைப்பதாக அறிவித்துள்ளன. இதன்மூலம் வீட்டுக்கடன், தனிநபர் கடன், ஆட்டோ கடன்களுக்கான வட்டி குறைய உள்ளது.
எஸ்பிஐ-யின் இந்த வட்டி குறைப்பு வரும் திங்கட்கிழமை முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 13.75 விழுக்காடாக இருந்த வட்டி இனி 13 விழுக்காடு வசூலிக்கப்படும் என்று அந்த வங்கியின் தலைவர் ஓ.பி. பட் கூறியுள்ளார்.
பாரத் ஸ்டேட் வங்கியைத் தொடர்ந்து, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ், தேனா வங்கி, பேங்க் ஆஃப் பரோடா வங்கிகளும் வட்டி விகித குறைப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளன.
சிட்டி வங்கி 0.5 விழுக்காடு வட்டியைக் குறைத்துள்ள நிலையில், இனி 15 விழுக்காடு வட்டி வசூலிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.
தனியார் வங்கிகளின் தலைவர்களுடன் நிதித்துறை செயலாளர் அருண் ராமநாதன் ஆலோசனை நடத்திய மறுதினமே சிட்டி வங்கி இந்த அறிவிப்பை வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
ஐசிஐசிஐ வங்கி, ஹெச்டிஎஃப்சி உள்ளிட்ட மற்ற தனியார் வங்கிகளும் அடுத்த ஓரிரு தினங்களில் வட்டி குறைப்பு அறிவிப்பை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.