நிதி துறை செயலாளர் தனியார், அயல் நாட்டு வங்கி அதிகாரிகளுடன் ஆலோசனை!
புதன், 5 நவம்பர் 2008 (14:08 IST)
புது டெல்லி: மத்திய நிதித்துறை செயலாளர் அருன் ராமநாதன்,. இன்று தனியார் மற்றம் அன்னிய நாட்டு வங்கி உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
பொருளாதார நெருக்கடியை தீர்க்கவும், வங்கி, நிதிச் சந்தையில் பணப்புழக்கத்தை அதிகரிக்க ரிசர்வ் வங்கி சில நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அத்துடன் வங்கிகள் கொடுக்கும் கடனுக்கான வட்டி விகிதத்தை குறைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளது.
ரிசர்வ் வங்கி ஏற்கனவே வங்கிகளின் இருப்பு விகித்தை மூன்றரை விழக்காடு வரை குறைத்துள்ளது. இதே போல் ரிபோ வட்டி விகிதத்தையும் அரை விழுக்காடு குறைத்துள்ளது.
இதனால் பணப்புழக்கம் அதிகரித்து வருகிறது. அத்துடன் வங்கிகள் கடனுக்கான வட்டியையும் குறைக்க துவங்கியுள்ளன. ஏற்கனவே பஞ்சாப் நேஷனல் வங்கி, யூகோ வங்கி, சின்டிகேட் பாங்க் ஆகியவை வட்டியை குறைப்பு பற்றி அறிவித்துள்ளன.
பாரத ஸ்டேட் வங்கி உட்பட மற்ற வங்கிகளும் வட்டி குறைப்பு அறிவிப்பை சில தினங்களில் அறிவிக்க உள்ளன.
மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் நேற்று, பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள மத்திய அரசு, ரிசர்வ் வங்கி எடுத்துள்ள முயற்சிகளின் பலன் எந்த அளவிற்கு உள்ளது என்பது குறித்து பொதுத்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இதை தொடர்ந்து இன்று, நிதி துறை செயலாளர் அருன் ராமநாதன், தனியார் மற்றும் அயல்நாட்டு வங்கி உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இந்த கூட்டத்தில் ரிசர்வ் வங்கி துணை கவர்னர் வி.லீலாதர் கலந்து கொண்டார். தனியார் மற்றும் அயல்நாட்டு வங்கிகள் சார்பில், ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் இணை மேலாண்மை இயக்குநர் சந்தை கோச்சர், ஜம்மு அண்ட் காஷ்மீர் வங்கியின் சேர்மன் ஹஷீப் ஏ.திரபு, ஹெச்.டி.எப்.சி வங்கியின் மேலாண்மை இயக்குநர் அதீத்யா பூரி, ஆக்ஸிஸ் வங்கி, ஹெச்.எஸ்.பி.சி, சிட்டி வங்கி, துஸ்டிசி வங்கி உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர். அத்துடன் நிதி அமைச்சகத்தின் உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.