ஏற்றுமதி நிறுவன உரிமையாளருக்கு சிறை: ம.பு.க நீதி மன்றம் தீர்ப்பு!

புதன், 17 செப்டம்பர் 2008 (15:19 IST)
மத்திய புலனாயுவு கழக (சி.பி.ஐ) ஆய்வாளருக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற ஆடை ஏற்றுமதி நிறுவன உரிமையாளருக்கு, 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.3 லட்சம் அபாரதம் விதித்து ம.பு.க சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

இந்த வழக்கின் விபரம் வருமாறு.

சென்னையை சேர்ந்த ஆடை ஏற்றுமதி நிறுவன உரிமையாளர் ஜெகதீஷ் லால் கனயாலால். இவர், யூனியன் பேங்க் ஆப் இந்தியாவின், சென்னை அண்ணாசாலை கிளையின் முன்னாள் மேலாளர் கே. செல்வராஜ் என்பவருடன் சேர்ந்து, அந்த வங்கியில் ரூ.3 லட்சம் அளவுக்கு மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

இது தொடர்பாக ம.பு.க காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கை லஞ்ச ஒழிப்பு பிரிவு ஆய்வாளர் அரிதாசன் நாயர் விசாரித்து வந்தார்.

அப்போது, வழக்கில் தனக்கு சாதகமாக நடந்து கொள்ளும்படி கூறி, ஆய்வாளர் அரிதாசன் நாயருக்கு ரூ.25 ஆயிரம் லஞ்சம் கொடுக்க ஜெகதீஷ்லால் கனயாலால் முன்வந்தார்.

இது தொடர்பாக மேல் அதிகாரிகளிடம் அரிதாசன் நாயர் புகார் செய்தார். அதன்பிறகு, ஜெகதீஷ்லால் கனயாலாலை கையும், களவுமாக பிடிக்க ம.பு.க காவல் துறையினர் திட்டமிட்டார்கள்.

இவர்கள் வகுத்த திட்டத்தின் படி, சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் மங்களூர் மெயில் ரெயிலில் வைத்து அரிதாசன் நாயருக்கு ஜெகதீஷ்லால் ரூ.5 ஆயிரத்தை முன்தொகையாக கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

இதை அறியாமல் அங்கு பணத்துடன் வந்த ஜெகதீஷ்லால் அதை அரிதாசன் நாயருக்கு கொடுக்க முயற்சித்தபோது, அங்கு மறைந்திருந்த காவல்துறையினர் அவரை கையும், களவுமாக கடந்த 19.4.1990 இல் கைது செய்தார்கள்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ம.பு.க நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை சமீபத்தில் முடிந்தது.

ம.பு.க கோர்ட்டு முதன்மை சிறப்பு நீதிபதி கே.நாகனாதன் தீர்ப்பினை நேற்று அளித்தார். அவர் ஜெகதீஷ்லால் கனையாலாலை குற்றவாளி என்று உறுதி செய்து, அவருக்கு 3 ஆண்டு கடுங்காவல் சிறையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

மத்திய அரசு துறைகள், நிறுவனங்களில் லஞ்சம் தொடர்பாக புகார் அளிக்க, சூப்பிரண்டு, சி.பி.ஐ. லஞ்ச ஒழிப்பு பிரிவு, சாஸ்திரி பவன் 3-வது மாடி, ஹாடோஸ் ரோடு, சென்னை-6 (போன்- 28255899, பேக்ஸ்- 28213828) என்ற முகவரியை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு ம.பு.கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


வெப்துனியாவைப் படிக்கவும்