பங்குச் சந்தையில் சரிவு!

வெள்ளி, 12 செப்டம்பர் 2008 (10:46 IST)
தேசிய, மும்பை பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போது, அதிகரித்த குறியீட்டு எண்கள், சில நிமிடங்களிலேயே குறைய ஆரம்பித்தன.

ஆசிய நாடுகளின் பங்குச் சந்தைகளில் கடந்த நான்கு நாட்களாக குறியீட்டு எண்கள் குறைந்து வந்தன. இன்று காலை நிலைமை மாறி, சாதகமான நிலை இருந்தது.

நேற்று அமெரிக்க பங்குச் சந்தையில் குறியீட்டு எண்கள் அதிகரித்ததாலும், ஐரோப்பிய சந்தைகளில் குறியீட்டு எண்கள் குறைந்தன.

நியூயார்க் முன்பேர சந்தையில் அக்டோபர் மாதத்திற்கான, கச்சா எண்ணெயின் விலை 100 என்ற அளவுக்கு குறைந்தது.

ஆகஸ்ட் 30 ஆம் தேதியுடன் முடிவடையும் வாரத்தில் பணவீக்கம் 12.1 விழுக்காடாக குறைந்துள்ளது. இதற்கு முந்தைய வாரத்தில் 12.34 விழுக்காடாக இருந்தது.

இன்று மதியம் தொழில் துறை உற்பத்தி பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது.

இவைகள் பங்குச் சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது. இன்று பங்குச் சந்தைகளில் ஏற்ற இறக்கமாக இருக்க வாய்ப்பு உண்டு.

காலை 10.30 மணிக்கு மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 142.79 புள்ளி குறைந்து குறியீட்டு எண் 14,181.50 ஆக குறைந்தது.

தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 21.75 புள்ளி குறைந்து குறியீட்டு எண் 4268.55 ஆக குறைந்தது.

மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் 21.55, பி.எஸ்.இ. 500- 35.40 புள்ளி குறைந்தது. ஆனால் சுமால் கேப் 7.64 புள்ளி அதிகரித்தது.

மும்பை பங்குச் சந்தையில் காலை 10.32 மணியளவில் 855 பங்குகளின் விலைகள் அதிகரித்தது. 863 பங்குகளின் விலைகள் குறைந்து இருந்தன. 81 பங்குகளின் விலைகளில் எவ்வித மாற்றமும் இல்லை.

வெப்துனியாவைப் படிக்கவும்