பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போதே இரண்டு பங்குச் சந்தைகளிலும் குறியீட்டு எண்கள் சரிந்தன.
மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 15,550 புள்ளிகளுக்கும் கீழாகக் குறைந்தது.
இதே போல் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 4,635.40 ஆக சரிந்தது.
காலையில் இருந்து அதிக சரிவுடன் துவங்கிய பங்குச் சந்தை, தொடர்ந்து குறைந்து வருகிறது.
காலை 10.40 மணி நிலவரப்படி மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 481.50 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 15,494.02 ஆக குறைந்தது.
இதே போல் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 125.03 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 4,646.30 ஆக குறைந்தது.
மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் 333.05, சுமால் கேப் 480.79, பி.எஸ்.இ. 500-229.50 புள்ளிகள் குறைந்தன.
தேசிய பங்குச் சந்தையில் எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் 1 முதல் 5 விழுக்காடு வரை குறைந்தன.
அமெரிக்க பொருளாதார நெருக்கடியால், அந்நாட்டு பங்குச் சந்தையில் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அதிக அளவு பங்குகளை விற்கும்போக்கு நீடிப்பதால் குறியீட்டு எண்கள் சரிந்து வருவதாக வர்த்தகர்ககள் தெரிவித்தனர்.
இன்று காலை நடந்த வர்த்தகத்தில் சென்செக்ஸ் பிரிவில் உள்ள பங்குகளில் எல் அண்ட் டி, ரிலையன்ஸ் எனர்ஜி போன்ற நிறுவனங்களின் பங்கு விலை அதிக அளவு குறைந்ததால், குறியீட்டு எண்கள் சரிந்தன என்று வர்த்தகர்கள் தெரிவித்தனர். பொதுத்துறை நிறுவன பங்குகள், பெட்ரோலிய நிறுவன பங்குகள், வங்கி, ரியல் எஸ்டேட், மின் உற்பத்தி, இயந்திர உற்பத்தி ஆகிய பிரிவில் உள்ள நிறுவனங்களின் பங்கு விலை அதிக அளவு சரிந்தது.
இன்று இரண்டு பங்குச் சந்தைகளிலும் காலை 11.45 மணி முதல் நண்பகல் 12.30 வரை வர்த்தகம் நிறுத்தப்படும். மீண்டும் 12.30 மணியளவில் வர்த்தகம் தொடங்கி மாலை 4.15 வரை நடைபெறும்.