கடலூர்: கடலூர் மாவட்டத்தில் வேளாண் இயந்திரங்களை மானிய விலையில் விற்பனை செய்யும் திட்டம், அறிமுகம் செய்யப்பட்டு இருப்பதாக மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர ரத்னூ தெரிவித்தார்.
சிறிய வகை நெல் நடவு இயந்திரங்களுக்கு 50 விழுக்காடு அல்லது அதிகபட்சம் ரூ.75 ஆயிரம் வரை மானியம் வழங்கப்படும். இதே போல் நெல் நாற்று கருவிகளுக்கு 50 விழுக்காடு அல்லது ரூ.25 ஆயிரம் வரை மானியம் வழங்கப்படும். களை எடுக்கும் கருவிக்கு 50 விழுக்காடு அல்லது ரூ.12,500 மானியம்.
பெரிய அளவிலான நெல் நடவு இயந்திரங்களுக்கு 33 விழுக்காடு அல்லது அதிகபட்சம் ரூ.2.60 லட்சம் வரை மானியம் வழங்கப்படும்.
பெரிய அளவிலான நெல் கதிரடிக்கும் இயந்திரங்களுக்கு 33 விழுக்காடு அல்லது அதிகபட்சம் ரூ.4 லட்சம் வரை மானியம் வழங்கப்படும்.
இத்திட்டத்தின் சிறப்பு அம்சமாக வட்டார அளவில் வேளாண் இயந்திரச் சேவை மையங்கள் அமைக்கப்பட உள்ளன. இந்த சேவை மையம் அமைக்க விரும்புவோர் ரூ.12 லட்சம் முதல் ரூ.16 லட்சம் வரை வேளாண் கருவிகள் வாங்க வேண்டும். இதில் 33 விழுக்காடு அல்லது அதிகபட்சம் ரூ.4 லட்சம் வரை மானியம் வழங்கப்படும்.
வேளாண் கருவிகள் குறித்த விவரங்களை, கடலூர் வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளர், கடலூர், சிதம்பரம், விருத்தாசலம் வேளாண் பொறியியில் துறை உதவி செயற்பொறியாளர்களை அணுகலாம் என்றும் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.