பிப்ரவரி வரை காவிரியில் தண்ணீர் திறந்து விட கோரிக்கை
வியாழன், 8 ஜனவரி 2009 (11:14 IST)
அறந்தாங்கி: பிப்ரவரி மாதம் வரை காவிரியில் தண்ணீர் திறந்து விட வேண்டும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதுக்கோட்டை அருகே உள்ள நாகுடியில் புதுக்கோட்டை மாவட்ட கல்லணைக் கால்வாய் விவசாயிகள் பாசனதாரர் கூட்டமைப்பின் கூட்டம் கடந்த திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், "கடந்த நவ. 25-ம் தேதி நடைபெற்ற கல்லணைக் கால்வாய் விவசாயிகள் பாசனதாரர் கூட்டமைப்புக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டபடி, பின்தங்கிய குறுகிய கால நெல் பயிர்களை விவசாயிகள் பயிரிட்டுள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கி, ஆவுடையார்கோவில், மணமேல்குடி, ஆலங்குடி ஆகிய வட்டங்களில் 30 ஆயிரம் ஏக்கர், தஞ்சை மாவட்டம், பேராவூரணி வட்டத்தில் 50 ஆயிரம் ஏக்கர் என மொத்தம் 80 ஆயிரம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்துள்ளனர். இந்த பயிர்களுக்கு பிப்ரவரி மாதம் வரை தண்ணீர் தேவைப்படுகிறது.
எனவே, மேட்டூரிலிருந்து தண்ணீர் திறப்பதை ஜனவரி 28-ம் நிறுத்த வேண்டும் என்ற அரசின் விதியைத் தளர்த்தி, இந்தமுறை பிப்ரவரி மாதம் வரை காவிரியில் தண்ணீரைத் திறந்து விட வேண்டும்.
இதனை வலியுறுத்தி பொதுப் பணித் துறை அமைச்சர், தலைமைப் பொறியாளர், சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்ப முடிவு செய்யப்பட்டது.