நெற்பயிரில் படைப்புழு - அதிகாரி யோசனை

திங்கள், 1 டிசம்பர் 2008 (09:54 IST)
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில், நெற்பயிரில் படைப்புழுவின் தாக்குதலைக் கட்டுப்படுத்த கைத்தெளிப்பான் மூலம் மருந்து தெளிக்குமாறு, மண்டபம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் ஆர். அரிவாசன் கூறியுள்ளார்.

கடந்த சில நாள்களாக பெய்துவரும் மழையினாலும், அதற்கு முன்பு நிலவிய கடுமையான வெயிலின் காரணமாகவும், நெல் பயிரில் படைப்புழுவின் தாக்குதல் மண்டபம் வட்டாரத்தில் பல இடங்களில் பரவலாகக் காணப்படுகிறது.

வறட்சியான காலநிலைக்குப் பின்னர் பெய்த மழையின் காரணமாக, படைப்புழுக்கள் படை, படையாகத் தோன்றி இளம் நெல் பயிரினை அழித்து வருகின்றன.

இப் புழுக்களின் சேதம் இரவு வேளைகளில் அதிகமாக காணப்படும். இளம் பயிரினை கத்தரித்து தின்பதால், ஆடு, மாடுகள் மேய்ந்தது போல் காணப்படும்.

இப் புழுவின் தாய் அந்துப் பூச்சியானது பெரிதாகவும், பழுப்பு நிறமுடையதாகவும் இருக்கும். முன் இறக்கைகளின் நடுவில் முக்கோண வடிவம் கொண்ட கரும்புள்ளிகள் காணப்படும். இப் பூச்சிகளின் வட்ட வடிவமான முட்டைக் குவியல்கள் நெல் தோகைகளில் அதிகமாகக் காணப்படும்.

இம் முட்டைகளில் இருந்து வெளிவரும் உருண்டை வடிவமான புழுக்கள் பச்சை நிறத்துடனும், உடலின் மேல் பகுதியில் இரு புறங்களிலும் மங்கிய கோடுகளுடனும் காணப்படும். இப் புழுக்களே பயிரினை சேதப்படுத்துகின்றன.

இதனைக் கட்டுப்படுத்திட, ஒரு ஏக்கருக்கு மானோகுரோட்டோபாஸ் அல்லது என்டோசல்பான் மருந்தினை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து, கைத்தெளிப்பான் மூலம் மாலை நேரங்களில் தெளித்து கட்டுப்படுத்தலாம்.

மேலும், விவரங்களுக்கு அருகில் உள்ள வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களை அணுகிடுமாறும் ஆர். அரிவாசன் கேட்டுக் கொண்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்