வானிலைக்கு தனி தொலைக்காட்சி சேவை!

செவ்வாய், 21 அக்டோபர் 2008 (19:32 IST)
வானிலை குறித்த தகவல்களை உடனுக்குடன் நாட்டு மக்களுக்கு அளிக்க தனி தொலைக்காட்சி சேவை அடுத்த ஆண்டு துவக்கம் முதல் செயல்படத் துவங்கும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

மக்களவையில் இத்தகவலைத் தெரிவித்த அறிவியல் துறை அமைச்சர் கபில் சிபல், அரசு-தனியார் கூட்டு முயற்சியாக இத்தொலைக்காட்சி சேவை இருக்கும் என்றும், அதற்காக தனியாரிடமிருந்து ஒப்பந்தப் புள்ளி கோரப்படும் என்றும் கூறினார்.

மழை நிலவரம், தட்ப வெப்ப நிலை உள்ளிட்ட வானியல் மாற்றங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களும் உடனுக்குடன் மக்களுக்கு இத்தொலைக்காட்சி சேவை தெரிவிக்கும் என்று கூறிய அமைச்சர் கபில் சிபல், துவக்கத்தில் நாளுக்கு 6 மணி நேர சேவையாக துவங்கி, பிறகு படிப்படியாக 24 மணி நேர சேவையாக்கப்படும் என்று கூறினார்.

2010ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள காமன்வெல்த் போட்டிகளுக்கு வானிலை தொடர்பான முன்னறிவிப்பு செய்வதற்கான தனி அமைப்பு விரைவில் ஏற்படுத்தப்படும் என்றும் கபில் சிபல் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்