ஓரிரு நாட்களில் வடகிழக்கு பருவ மழை தொடங்கும் - மழைராஜ்!
சனி, 4 அக்டோபர் 2008 (18:54 IST)
தென்மேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்புள்ளதாகவும், இன்னும் ஓரிரு நாட்களில் வடகிழக்கு பருவ மழை துவங்கலாம் என்றும் மழை குறித்து ஆய்வு செய்துவரும் மழைராஜ் தெரிவித்துள்ளார்!
இரண்டு வாரங்களில் வடகிழக்கு பருவ மழை துவங்க வாய்ப்புள்ளதாக கடந்த 19ஆம் தேதி தெரிவித்திருந்தேன். தற்போதைய வானிலை கணிப்பின்படி ஓரிரு நாட்களில் தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை துவங்க வாய்ப்புள்ளது.
தென்மேற்கு வங்க கடல் பகுதியில் கடலூருக்கு தெற்கே குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகும் சூழ்நிலை உள்ளதால், அது வலுவடைந்து வடகிழக்கு பருவ மழையாக மாறும் வாய்ப்புள்ளது.
இதனால் கடலூர், விழுப்புரம், புதுச்சேரி, சென்னை, சேலம், தருமபுரி, கொடைக்கானல் ஆகிய பகுதிகளில் பலத்த மற்றும் மிக பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மேலும் திருவாரூர், திருச்சி, தஞ்சை, நாகை, அரியலூர், பெரம்பலூர் உட்பட தமிழகத்தின் பிற மாவட்டங்களில் மிதமானது முதல் பலத்த மழை பெய்யும் வாய்ப்புள்ளது.
அக்டோபர் மாதம் 4, 5, 6, 7, 10, 13, 14, 16-19 ஆகிய தேதிகளில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ள தேதிகளாகும். கடலூர், புதுச்சேரி ஆகிய இடங்களில் வடகிழக்கு பருவ மழை அதிக அளவு பெய்ய வாய்ப்புள்ளது.