20 விழுக்காடு வரை ஈரப்பதமுள்ள நெல் கொள்முதல்: கருணாநிதி!
சனி, 4 அக்டோபர் 2008 (13:16 IST)
விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று 20 விழுக்காடு வரை ஈரப்பதமுள்ள நெல், இன்று முதல் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக கொள்முதல் நிலையங்கள், கொள்முதல் பணி மேற்கொள்ளப்படும் கூட்டுறவு சங்கங்கள் ஆகியவற்றில் கொள்முதல் செய்யப்படும் என்று முதலமைச்சர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
webdunia photo
FILE
இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 2008-2009 ஆம் ஆண்டு குறுவை கொள்முதல் பணி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மூலம் தமிழகம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
குறுவை கொள்முதல் செய்யப்படும் காலம் மழை பெய்யக்கூடிய காலமாக இருப்பதால் நெல்லில் ஈரப்பதம் அதிகமாக இருக்க வாய்ப்புள்ள நிலையில் 20 விழுக்காடு வரை ஈரப்பதமுள்ள நெல்லை கொள்முதல் செய்ய காவிரி பாசன விவசாயிகள் முறையிட்டனர்.
முதலமைச்சர் கருணாநிதி விவசாயிகளின் நலன் கருதி அவர்களுடைய கோரிக்கையினை கனிவுடன் பரிசீலித்து 20 விழுக்காடு ஈரப்பதம் வரை உள்ள நெல்லை கொள்முதல் செய்ய ஆணை பிறப்பித்துள்ளார்.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக கொள்முதல் நிலையங்கள், கொள்முதல் பணி மேற்கொள்ளப்படும் கூட்டுறவு சங்கங்கள் ஆகியவற்றில் இன்று (4ஆம் தேதி) முதல் 20 விழுக்காடு வரை ஈரப்பதமுள்ள நெல் கொள்முதல் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.