ஆழியாறு அணையில் தண்ணீர் திறப்பு!

வெள்ளி, 3 அக்டோபர் 2008 (12:44 IST)
பொள்ளாச்சி : ஆழியாறு அணையில் இருந்து பாசனத்துக்காக, வியாழக்கிழமதண்ணீர் திறந்து விடப்பட்டது.

ஆழியாறு படுகை பாசனத்துக்கு உட்பட்ட பகுதிகளான பொள்ளாச்சி, வேட்டைக்காரன்புதூர், சேத்துமடை மற்றும் ஆழியாறு ஊட்டுக் கால்வாய்களில் ஆண்டுக்கு ஒருமுறை பாசனத்துக்குத் தண்ணீர் திறக்கப்படுகிறது.

இந்த ஆண்டு சென்ற வியாழக்கிழமை தண்ணீர் திறக்க அரசாணை வெளியிடப்பட்டது.

பொள்ளாச்சி கால்வாயில் தண்ணீர் திறப்பதற்கான ஷட்டரை, வட்டாட்சியர் ஆர்.பாலசுப்பிரமணியம் வியாழக்கிழமை திறந்தார்.

வேட்டைக்காரன்புதூர் கால்வாயில் பூஜை முடிந்தபின், சார் ஆட்சியர் ஜெ.சந்திரகுமார் பூக்களை கால்வாய்ப் பகுதியில் தூவினார்.

பொள்ளாச்சி, சேத்துமடை மற்றும் ஆழியாறு ஃபீடர் கால்வாயில் "ஏ' மண்டலத்துக்கும், வேட்டைக்காரன்புதூர் கால்வாயில் "பி' மண்டலத்துக்கும் தண்ணீர் திறக்கப்பட்டது.

பொள்ளாச்சி கால்வாய் மூலம் 11,616 ஏக்கரும், வேட்டைக்காரன்புதூர் கால்வாயில் 5,623 ஏக்கரும், சேத்துமடை கால்வாயில் 2,515 ஏக்கரும், ஆழியாறு ஊட்டுக் கால்வாயில் 2,362 ஏக்கரும் பாசனம் பெறுகின்றன.

இந்த அணையில் இருந்து 135 நாள் பாசனத்தில் 75 நாட்களுக்கு தண்ணீர் வழங்கப்படும். இது 5 சுற்றுகளில் 15 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டு, பிறகு 7 நாள் இடைவெளிக்கு பின்பு மீண்டும் தண்ணீர் திறந்து விடப்படும்.

வடகிழக்குப் பருவமழை பெய்து அணை நீர்மட்டம் உயர்ந்தால் கூடுதலாக பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட வாய்ப்பு உள்ளதாக பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர்.

பரம்பிக்குளம் செயற்பொறியாளர் ஆர்.பழனிச்சாமி, துணைக் கோட்டப் பொறியாளர்கள் குழந்தைசாமி, மதியழகன், ஆழியாறு அணை திட்டக் குழுத் தலைவர் கிருஷ்ணசாமி உள்ளிட்ட பாசன சபைத் தலைவர்கள் விழாவில் பங்கேற்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்