மஞ்சள் உற்பத்தி பாதிக்கப்படும்?

திங்கள், 30 ஜூன் 2008 (12:55 IST)
''மஞ்சள் பயிரிடப்படும் பகுதிகளில் மழை இல்லாத காரணத்தினால், மஞ்சள் உற்பத்தி பாதிக்கப்படும்'' என்று மும்பை வர்த்தகர்கள் கருதுகின்றனர்.

தமிழ்நாட்டில் ஈரோடு, ஆந்திராவில் உஸ்மான்பாத், நிஜாமாபாத், கர்நாடகத்தில் மைசூர் ஆகிய பகுதிகளில் அதிக அளவு மஞ்சள் பயிரிடப்படுகிறது. இந்த பகுதியில் பயிரிடப்படும் பரப்பளவு, பருவநிலையை பொறுத்தே உற்பத்தி இருக்கும். இங்கு உற்பத்தியாகும் அளவை கொண்டு மஞ்சள் விலை நிர்ணயிக்கப்படுகிறது.

இந்த பகுதிகளில் மழை போதிய அளவு பெய்யாத காரணத்தினால், மும்பை முன்பேர சந்தையில் மஞ்சள் விலை அதிகரித்து விட்டது.

மஞ்சள் பயிரிடப்படும் பகுதிகளில் போதிய அளவு மழை பெய்தால், மஞ்சள் விலை குவி‌ண்டாலுக்கு ரூ.100 முதல் ரூ.150 வரை குறைய வாய்ப்பு இருப்பதாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

மஞ்சள் பயிரிடப்படும் மைசூர் பகுதியில் தேவையான அளவிற்கு மழை பெய்துள்ளது. இதனால் இங்கு அதிக பரப்பளவில் மஞ்சள் பயிரிடப்படும் என்று தெரிகிறது. இதனால் அடுத்த வருடம் தேவையான அளவு உற்பத்தி மைசூர் பகுதியில் இருக்கும்.

ஆனால் ஈரோடு, உஸ்மான்பாத், நிஜாமாபாத் ஆகிய பகுதிகளில் தேவையான அளவு மழை பெய்யவில்லை. இந்த பகுதிகளில் மஞ்சள் பயிரிடப்படுவது தாமதமாகிறது. இங்கு உற்பத்தி குறையும் என்பதால், மஞ்சள் விலை அதிகரித்து வருகிறது.

அதே நேரத்தில் ஏற்றுமதி சந்தையிலும், உள்நாட்டிலும் வாங்கும் போக்கு குறைந்துள்ளதால் அதிக அளவு விலை உயரவில்லை என்ற வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்