அரிசி ஏற்றுமதிக்குத் தடை நீக்கம்!

செவ்வாய், 22 ஏப்ரல் 2008 (16:00 IST)
பூடானுக்கு அரிசி ஏற்றுமதி செய்ய இந்தியா தடை நீக்கி இருப்பதாக பூடான் விவசாய துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தியாவில் அரிசி, கோதுமை விலை கடுமையாக அதிகரித்து வருவதால் மத்திய அரசு பாசுமதி அல்லாத மற்ற ரக அரிசியை ஏற்றுமதி செய்வதற்கு தடை விதித்தது.

தற்போது பூடானுக்கு மட்டும் அரிசி ஏற்றுமதி செய்ய இந்திய அரசு தடையை நீக்கியுள்ளதாக பூடான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இருநாடுகளுக்கும் இடையே நிலவும் சுமுகமான உறவை பேணுவதற்காக இந்தியா நல்லெண்ணத்துடன் அரிசி ஏற்றுமதி தடையை நீக்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பூடான் கொள்கை மற்றும் திட்டமிடல் அமைச்சகத்தின் தலைவர் டென்ஜின் சோபால் கூறுகையில், நாங்கள் எந்த நாட்டுடனும் போட்டியிடவில்லை. நாங்கள் மிக குறைந்த அளவு அரிசியையே ஏற்றுமதி செய்கின்றோம். இந்தியா உள்நாட்டில் ஏற்பட்ட தட்டுப்பாட்டினாலும், விலை உயர்வை தடுக்கவும் தடை விதித்தது என்று கூறினார்.

இந்தியாவில் இருந்து இமயமலையில் அமைந்துள்ள பூடானுக்கு பாசுமதி அரிசி உட்பட பல்வேறு ரக அரிசி ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இந்தியாவில் இருந்து பூடான் வருடத்திற்கு 50 ஆயிரம் டன் இறக்குமதி செய்கிறது. அங்கு வருடத்திற்கு 70 ஆயிரம் டன் உற்பத்தியாகிறது.

அதே நேரத்தில் பூடான் வருடத்திற்கு 100 டன் சிவப்பு அரிசியை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்