கல்வி கற்க வறுமை ஒரு தடையாக இருக்கக் கூடாது என்ற அடிப்படையில் அரசு, தனியார் நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள் என கல்விக்கு ஏராளமான நிதி உதவிகள் வழங்கப்படுகின்றன.
அவை எல்லாம் எத்தனை ஏழை மக்களுக்கு சென்று சேருகின்றன. அல்லது எத்தனை ஏழை மாணவர்கள் அது பற்றி அறிந்துள்ளனர்.
இந்த குறையைப் போக்க மும்பையில் உள்ள கல்லூரி மாணவர்கள் 200 பேர் சேர்ந்து ஒரு இணையதளத்தை உருவாக்கியுள்ளனர்.
www.a2zscholarships.com
என்ற இந்த இணையத்தில் மாணாக்கர் படிக்கும் துறை, வீட்டின் வருட வருமானத்தை அடிப்படையாகக் கொண்டு கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.
இந்த இணையதளத்தில் மாணாக்கரது பெயர் உள்ளிட்ட தகவல்களை அளித்தால் போதும். அவர்களுக்கு தகுதியுடைய அனைத்து கல்வி உதவித் தொகை பற்றிய தகவல்களையும், அதை வழங்கும் அமைப்புகள் பற்றிய தகவல்களையும் பெறலாம்.
அதில் உங்களுக்கேற்றதை தேர்வு செய்து அவற்றிற்கு நீங்கள் விண்ணப்பிக்கலாம்.
நமது விண்ணப்பத்தை இந்த இணையதளத்தினரே கல்வி உதவித் தொகை வழங்கும் நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்கின்றனர்.
மேலும் கல்வி உதவித் தொகை வழங்கும் நிறுவனங்களும் தமது தகவல்களை இந்த இணையத்தில் இலவசமாக பதிவு செய்து கொள்ளலாம்.
இணையதளம் துவங்கி 2 மாதங்களே ஆகும் நிலையில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் இதன் மூலம் கல்வி உதவித் தொகை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.