பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, தமிழ்நாடு இளநிலை ஆசிரியர் சங்கத்தின் சார்பில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவில், 2003ஆம் ஆண்டு அரசுப் பள்ளிகளில் 12 ஆயிரம் ஆசிரியர்கள் தொகுப்பு ஊதியத்தில் பணியமர்த்தப்பட்டனர். 2006ஆம் ஆண்டு இவர்கள் காலமுறை ஊதியத்தில் பணி வரன்முறை செய்யப்பட்டனர். இவர்களில் 6,500 பேர் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டனர்.
தற்போது, அரசுப் பள்ளிகளில் புதிதாக 7,500 பட்டதாரி ஆசிரியர்களை நியமிப்ப தற்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
6,500 நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு பணி உயர்வு, பணியிட மாறுதல் அளித்து விட்டு மீதமுள்ள இடங்கள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் புதிய ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.
புதிய ஆசிரியர்கள் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களாக நேரிடையாக நியமித்தால் எங்களது பணி உயர்வு பாதிக்கப்படும். இதுதொடர்பான எங்களது மனுவை சென்னை உயர் நீதிமன்றம் டிசம்பர் 23ஆம் தேதி தள்ளுபடி செய்துவிட்டது.
அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். எங்களுக்கு பணி உயர்வு அளித்த பிறகே, புதிய ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் வி. தனபாலன், எம். சத்யநாராயணன் ஆகியோர் கொண்ட விடுமுறைகால அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த நீதிபதிகள், அரசுப் பள்ளிகளில் 7,500 ஆசிரியர்கள் நியமனத்துக்கு தடைவிதிக்க மறுத்துவிட்டனர்.