பட்டதாரிகளுக்கு வாய்ப்பு : மதுரையில் வேலை வாய்ப்பு முகாம்!
செவ்வாய், 2 டிசம்பர் 2008 (21:15 IST)
சென்னை, கல்லூரிக் கல்வி இயக்குநரின் வேலை வாய்ப்பு பிரிவு, மதுரை மற்றும் மதுரை மண்டலத்தின் ஆளுகைக்குட்பட்ட அரசினர் கலைக் கல்லூரியில் படித்து பட்டம் பெற்ற மாணவர்களுக்கு வரும் 7ஆம் தேதி ஒரு நாள் வேலைவாய்ப்பு முகாம் ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளது.
மதுரை, ஸ்ரீ மீனாட்சி அரசினர் மகளிர் கல்லூரி வளாகத்தில் டிசம்பர் 7ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
இதில், மதுரை பகுதியில் வேலை செய்ய விரும்பும் ஏனைய பகுதி மாணவர்களும் பங்கேற்க வரவேற்கப்படுகின்றனர்.
இவ்வேலைவாய்ப்பு முகாம் மூலமாக ஒரு தொலைத்தொடர்பு நிறுவனத்திற்கு தமிழகம் முழுவதும் தங்களது செல்பேசி, டேட்டா கார்டு போன்ற தொலைநுட்ப கருவிகளை விற்பனை செய்ய நூற்றுக்கணக்கான விற்பனைப் பிரதிநிதிகள் தேவைப்படுகின்றனர்.
மதுரைப் பகுதியில் இதுவே முதன் முறையாக நடத்தப்படும் வேலை வாய்ப்பு முகாம் ஆகும். இப்பணிக்கு தாய்மொழியான தமிழில் சரளமாகப் பேசும் பயிற்சியே போதுமான தகுதியாகும்.
இளம் பட்டதாரிகளுக்கு, இது குறைந்தபட்ச தகுதியில் நல்ல வருமானம் தருகின்ற சிறந்த வேலைவாய்ப்பாகும். மாத வருமானம் ரூ.7,500 முதல் ரூ.15,000 வரை கிடைக்கும்.
பட்டதாரிகள் தங்களுடைய சான்றிதழ்களுடன் நேரில் ஆஜராக வேண்டும்.
இத்தகவலை கல்லூரிக் கல்வி இயக்குநர் நளினி ரவீந்திரன் தெரிவித்துள்ளார்.