பேசிய ஊதியத்துடன் மாணவர்களை பணியில் அமர்த்த விப்ரோ ஒப்புதல்!

செவ்வாய், 2 டிசம்பர் 2008 (15:19 IST)
தகவல் தொழில் நுட்ப முன்னணி நிறுவனமான விப்ரோ தனது மென்பொருள் பிரிவிற்கு தேர்வு செய்த பொறியியல் மாணவர்களை முதலில் பேசிய ஊதியத்துடனேயே பணியில் அமர்த்த ஒப்புக் கொண்டுள்ளது. அரசு தலையீட்டிற்கு பிறகு அந்த நிறுவனம் இந்த முடிவுக்கு வந்துள்ளது.

ஒரிசா மாநிலத்தில் 2007ஆம் ஆண்டு பல்வேறு பொறியியல் கல்வி நிறுவனங்களிலிருந்து ஆயிரக்கணக்கான மாணவ பொறியாளர்களை தன் நிறுவனத்திற்கு பணியாற்ற தேர்வு செய்தது ‌வி‌ப்ரோ. இந்த மாணவர்கள் தங்கள் பட்டப்படிப்பை முடித்த பிறகு இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் முதல் அக்டோபர் மாதத்திற்குள் விப்ரோவில் பணியில் சேருவதாயிருந்தது.

ஆனால் உலக பொருளாதார நெரு‌க்கடி காரணமாக இந்த மாணவர்களை கொல்கத்தாவில் உள்ள தங்களது பி.பி.ஓ. நிறுவனத்தில் டிசம்பர் 5ஆம் தேதி பணியில் சேருமாறு அறிவுறுத்தியது ‌வி‌ப்ரோ.

மேலும் பி.பி.ஓ. நிறுவனத்தில் மாணவர்கள் சேர மறுத்தால் அவர்களது நியமன உத்தரவுகள் ரத்து செய்யப்படும் என்றும் விப்ரோ கூறியுள்ளது.

இதனால் கவலையடைந்த மாணவர்கள் ஒரிசா முதல்வர் நவீன் பட்னாயக்கிடம் புகா‌ர் அளித்தனர். மேலும் மா‌நில‌த் தகவல் தொழில் நுட்பத் துறை செயலர் மொஹாபாத்ரா, ஓ.சி.ஏ.சி. தலைமை அதிகாரி விஷால் தேவ், மா‌நில தகவல் தொழில் நுட்ப மேம்பாட்டு பிரிவுத் தலைவர் ஏ.கே. பாண்டா ஆகியோரையும் நேரில் சந்தித்து விப்ரோ நிறுவனத்தின் இத்தகைய போக்குகளை விவரித்து தலையிடுமாறு கோரினர்.

இதையடு‌த்து, அரசு தலையீட்டினால் விப்ரோ நிறுவனம் தனது முடிவை மாற்றிக் கொண்டுள்ளது. அதாவது கொல்கத்தாவில் உள்ள விப்ரோ பி.பி.ஓ. நிறுவனத்தில் மாணவர்கள் சேராவிட்டாலும், மென்பொருள் பிரிவில் தேர்வு செய்யப்பட்டதற்கான நியமன உத்தரவுகள் ரத்து செய்யப்பட மாட்டாது என்று உத்தரவாதம் அளித்துள்ளது.

இது குறித்து விப்ரோ நிறுவனத்தின் திறன் தேர்வுப் பிரிவு துணைத் தலைவர் பிர்வானி கூறுகையில், பி.பி.ஓ. பிரிவில் சேரும் மாணவர்கள் 18 மாதங்களுக்குள் மென்பொருள் பிரிவிற்குள் கொண்டுவரப்படுவார்கள் என்றார்.

பி.பி.ஓ. பிரிவில் பணிக்குச் சேர்ந்து விட்டால் நியமன உத்தரவில் மென்பொருள் பிரிவு வேலைக்காக ஒத்துக் கொண்ட ஊதியத் தொகையினை விப்ரோ நிறுவனம் குறைத்து விடும் என்று மாணவர்கள் முதலில் கவலை அடைந்தனர். ஆனால் இப்போது மாநில அரசின் தலையீட்டிற்கு பிறகு ஒப்புக் கொண்ட ஊதியம் மாற்றப்பட மாட்டாது என்று விப்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்