ஜப்பான் மொழி பயில மென்பொருள் அறிமுகம்!

இணையதளத்தின் வாயிலாக ஜப்பானிய மொழியை மிகச் சுலபமாக கற்றுக் கொள்ள உதவும் புதிய நவீன மென்பொருளை ஜப்பானின் ஜெ-வெய்க் (Jweic) நிறுவனமும், சென்னையைத் தலைமையிடமாகக் கொண்ட இன்போ-வியூ (Infoview) நிறுவனமும் கூட்டாக அறிமுகப்படுத்தி உள்ளன.

சென்னையில் நேற்று நடைபெற்ற மென்பொருள் அறிமுக நிகழ்ச்சியில், ஜப்பான் துணைத் தூதரக அதிகாரி (சென்னை) கசுவோ மினாக்வா, குறுந்தகடு வடிவிலான மென்பொருளை வெளியிட்டார். இதனை இந்திய-ஜப்பானிய வர்த்தக மற்றும் தொழிற் சபையின் பொது செயலாளர் கிருஷ்ணமூர்த்தி பெற்றுக் கொண்டார்.

விழாவில் பேசிய பலரும், ஜப்பானுக்கும், இந்தியாவுக்கும் இடையிலான வர்த்தக, தொழில் தொடர்புகளுக்கு மொழி ஒரு முக்கிய தடையாக இருப்பதாகவும், அதனைத் தகர்த்து வர்த்தகத்தை பெருக்கும் நோக்கிலேயே இன்போவியூ நிறுவனத்துடன் இணைந்து நவீன மென்பொருள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டனர்.

சுமார் 90 மணி நேரத்தில் ஜப்பானிய மொழியை கற்றுக்கொள்ள உதவும் இந்த மென்பொருளுடன், முறையாக பயிற்சியளிக்கும் ஜப்பான் ஆசிரியர்களும் இணையதளத்தில் மாணவர்களின் சந்தேகங்களுக்கு விளக்கமளிக்கும் வசதியையும் இன்போவியூ நிறுவனம் ஏற்படுத்தியுள்ளது.

ஜப்பானுக்கு உயர்கல்வி மற்றும் ஐடி பணிக்காகச் செல்லும் இந்திய இளைஞர்கள் மற்றும் பல்வேறு பணிகளுக்குச் செல்லும் தமிழக இளைஞர்களுக்கு இப்பயிற்சி மிகுந்த பலனளிக்கும்.

மொத்தம் 4 கட்டங்களாக தனித்தனியாக இப்பயிற்சி நடத்தப்படுகிறது. இதில் முதல் கட்டத்தில் ஜப்பானிய எழுத்துகள், வார்த்தைகளும், 2ம் கட்ட பயிற்சியில் இலக்கணம், பேச்சுப் புலமை உள்ளிட்டவையும், 3வது கட்டத்தில் வார்த்தை உச்சரிப்புகள் மேம்படுத்துதலும், 4வது கட்டத்தில் ஜப்பானியருடன் சகஜமாக பேசுவதுடன், அவர்கள் பேசுவதை புரிந்து கொள்ளும் அளவுக்கு பல்வேறு பயிற்சிகளும் அளிக்கப்படும்.

இதுதொடர்பாக மேலும் விவரங்கள் தேவைப்படுவோர், 044 - 47423300 அல்லது 044 - 47423301 என்ற தொலைபேசி எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம் என இன்போவியூ நிறுவனம் தெரிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்