சென்னையில் உயர்கல்வி கண்காட்சி

திங்கள், 21 ஜூலை 2008 (16:21 IST)
சென்னை பல்கலைக்கழகத்தில் 27 கல்லூரிகள் பங்குபெற்றுள்ள உயர்கல்வி கண்காட்சி-2008, இன்று தொடங்கியுள்ளது.

நான்கு நாட்கள் நடைபெறவிருக்கும் இந்தக் கண்காட்சி குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சென்னை பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் எஸ். ராமச்சந்திரன், பிளஸ் 2-வில் தேறிய மாணவர்கள் அடுத்து எந்த வகையான இளங்கலை, இளஅறிவியல் பாடத்தைத் தேர்வு செய்வது என்பது குறித்து விளக்குவதற்காக முதல்முறையாக இந்த கண்காட்சி நடத்தப்படுவதாகக் கூறினார்.

சென்னை பல்கலைக்கழகத்துடன் இணைந்துள்ள 27 தனியார் கல்லூரிகள், சென்னை பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி நிறுவனம் ஆகியவை கண்காட்சியில் பங்கேற்பதாகவும் அவர் கூறினார்.

இந்த கண்காட்சி மூலம் கல்வி நிறுவனங்களில் உள்ள துறைகள், வேலைவாய்ப்புக்கு உதவும் துறைகள் பற்றிய தகவல்கள், கல்லூரியின் கட்டமைப்பு வசதிகள், கட்டணம், மாணவர்களுக்கு கிடைக்கும் சலுகைகள் போன்றவற்றை ஒரே இடத்தில் தெரிந்து கொள்ள முடியும் என்றார் அவர்.

விளக்கக் கையேடுகள், அனைத்து கல்லூரிகளின் விண்ணப்பங்கள் ஆகியவையும் இந்த கண்காட்சியில் கிடைக்கின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்