ஐ.ஐ.டி. இயக்குனர் நியமனம் ரத்து : உயர் நீதிமன்றம் உத்தரவு
புதன், 24 டிசம்பர் 2008 (12:14 IST)
சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் (ஐ.ஐ.டி.) இயக்குனராக எம்.எஸ். ஆனந்த் நியமனம் செய்யப்பட்டது செல்லாது என்றுகூறி நியமனத்தை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையை சேர்ந்த டாக்டர் முரளிதரன் என்பவர், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், 'சென்னை இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் இயக்குனராக டாக்டர் எம்.எஸ்.ஆனந்த் நியமிக்கப்பட்டுள்ளார்.
சட்டப்படி இந்திய தொழில்நுட்பக் கழக கவுன்சில்தான் இயக்குனரை நியமிக்க வேண்டும். ஆனால் இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் தேர்வு குழு, இவரை நியமித்துள்ளது. 2006ல் இவரது பணிக் காலம் முடிந்தது. அதன்பிறகு 5 ஆண்டுக்கு அவருக்கு பணி நியமனம் செய்தது சட்டவிரோதமானது. எனவே, அவரது பணி நியமன உத்தரவை ரத்து செய்ய வேண்டும்’ என்று கூறியிருந்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி சந்துரு பிறப்பித்த உத்தவில், 'சென்னை இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் இயக்குனராக ஆனந்தை நியமித்த உத்தரவை ரத்து செய்கிறோம். அவரது நியமனம், சட்டபடியாக செய்யவில்லை என்று தெரிகிறது. அந்த உத்தரவை ரத்து செய்கிறோம்' என்று தீர்ப்பளித்தார்.