அமெரிக்காவிற்கு மாணவர்களை அனுப்புவதில் இந்தியா முதலிடம்!
2007- 08 ஆம் ஆண்டில் அதிகப்ட்சமான மாணவர்களை அமெரிக்காவிற்கு கல்விக்காக அனுப்பி இந்தியா சாதனை புரிந்துள்ளது.
2007- 08ஆம் ஆண்டில் மட்டும் அமெரிக்க பல்கலைக் கழங்களுக்கும், கல்லூரிகளுக்கும் இந்தியாவிலிருந்து சுமார் 94,563 மாணவர்கள் அனுப்பப்பட்டுள்ளனர்.
சர்வதேச கல்வி நிறுவனமான ஐ.ஐ.இ. (IIE) என்பதன் "ஓபன் டோர்ஸ் ஆண்டறிக்கை" இந்த தகவலை அளித்துள்ளது. அதாவது குறிப்பிட்ட ஆண்டிற்கு முந்தைய ஆண்டைக் காட்டிலும் தற்போது அமெரிக்காவிற்கு கல்விக்காக அனுப்பப்படும் மாணவர்கள் எண்ணிக்கை 13 விழுக்காடு அதிகரித்துள்ளது.
இதில் இந்தியா முதலிடத்திலும் சீனா (81,127 மாணவர்கள்) 2வது இடத்திலும், தென் கொரியா (69,124 மாணவர்கள்) 3-வது இடத்திலும் உள்ளன.
அமெரிக்காவிற்கு கல்வி பயில செல்லும் மாணவர்களில் 20 விழுக்காடு மாணவர்கள் வர்த்தகம் மற்றும் நிர்வாகம் தொடர்பான கல்விப்படிப்புகளை தேர்வு செய்கின்றனர்.
பொறியியலை தேர்வு செய்யும் மாணவர்கள் 17 சதவீதமாகவும், பௌதீகம், உயிரியல் விஞ்ஞானத்தை தேர்ந்தெடுக்கும் மாணவர்கள் 9 சதவீதமாகவும், கணிதம்-கணினிக் கல்விகளில் 8 சதவீத மாணவர்களும், நுண் மற்றும் பயன்பாட்டுக் கலைகளில் 6 சதவீத மாணவர்களும், சுகாதாரம் படிக்கும் மாணவர்கள் 5 சதவீதமாகவும், ஆங்கில மொழி கற்பவர்கள் 5 சதவீதமாகவும், கல்வி மற்றும் மானுடம் சம்பந்தப்பட்ட துறைகளில் 3 சதவீத மாணவர்களும் வேளாண்மைக் கல்வியில் 2 சதவீத மாணவர்களும் உள்ளனர்.
கலிஃபோர்னியா பல்கலைக் கழகம் இந்த ஆண்டில் 7,189 சர்வதேச மாணவர்களை சேர்த்து தொடர்ந்து 7-வது ஆண்டாக முதலிடம் வகிக்கிறது.
நியூயார்க் பல்கலைக் கழகம் 2-வது இடத்திலும், கொலம்பியா பல்கலைக் கழகம் 3-வது இடத்திலும் உள்ளன.
2007- 08 கல்வியாண்டில் அமெரிக்காவில் கல்வி பயிலச் சென்ற பிற நாட்டு மாணவர்கள் எண்ணிக்கை 7 சதவீதம் அதிகரித்து 623,805 மாணவர்களாக உள்ளது.