ஐ.ஏ.எஸ். பிரதான தேர்வு: எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கு ரூ.37 லட்சம் நிதியுதவி!
சனி, 18 அக்டோபர் 2008 (11:33 IST)
சென்னை: 2008ஆம் ஆண்டுக்கான ஐ.ஏ.எஸ். பிரதான தேர்வு எழுத தகுதிப் பெற்றுள்ள தமிழகத்தைச் சேர்ந்த ஆதிதிராவிடர், பழங்குடியினர் 147 பேருக்கு ரூ.37 லட்சம் உதவியை தாட்கோ வழங்கியுள்ளது.
தமிழ்நாடு ஆதி திராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழக அரசு மே 2008இல் நடைபெற்ற இந்திய குடிமைப் பணி (ஐ.ஏ.எஸ்.) முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய ஆதிதிராவிட கிறித்துவ இளைஞர்களுக்கு இந்தியக் குடிமைப்பணி பிரதான தேர்வுக்கு தயார் செய்து கொள்வதற்கான செலவினை மேற்கொள்வதற்காக, தாட்கோ ரூ.25 ஆயிரம் ஊக்கத் தொகையாக வழங்க ஆணையிட்டது.
தகுதியுள்ள இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரி கடந்த 15ஆம் தேதி வரை மொத்தம் 147 விண்ணப்பங்கள் பெறப்பட்டதில் 73 பேருக்கு ரூ.18.25 லட்சத்துக்கான காசோலைகள் நேரடியாக வழங்கப்பட்டன. மீதமுள்ள 74 பேருக்கு ரூ.18.50 லட்சம் தொகைக்கான காசோலை விரைவு அஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது" என்று கூறப்பட்டுள்ளது.