கணினி ஆசிரியர் தேர்வு எழுத அனுமதி : உயர் நீதிமன்றம் உத்தரவு!
சனி, 11 அக்டோபர் 2008 (14:13 IST)
கணினி ஆசிரியர் பணி நியமனத்திற்கான சிறப்பு தேர்வு எழுதுவதற்கு 10 பேரை அனுமதிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவர் உள்பட 10 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், நாங்கள் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஒப்பந்த அடிப்படையில் கணினி ஆசிரியர்களாக 1999ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வருகிறோம்.
எங்களை பணி நிரந்தரம் செய்யும் வகையில் 1,850 கணினி ஆசிரியர் பணியிடங்களை உருவாக்கவும், சிறப்பு தேர்வு நடத்தவும் அரசு உத்தரவிட்டது. இதை எதிர்த்து பி.எட். படித்த கணினி ஆசிரியர்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து அப்பீல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த உயர் நீதிமன்ற கூடுதல் அமர்வு, கணினி ஆசிரியர் பணி நியமனத்திற்கான சிறப்பு தேர்வை ஒருமுறை நடத்திக் கொள்ளலாம் என்றும் தேர்வு நடைமுறைகளை 6 மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
கணினி ஆசிரியர் பணி நியமனத்திற்கான சிறப்பு தேர்வு 12ஆம் தேதி நடக்கிறது. ஆனால், இந்தத் தேர்வுக்காக எங்களுக்கு நுழைவுச் சீட்டு கொடுக்க மறுத்துவிட்டனர். முதுகலை பட்டய படிப்பிற்கான சான்றிதழை சமர்ப்பிக்கவில்லை என்று காரணம் கூறினார்கள். நாங்கள் பெரியார் பல்கலைக் கழகத்தில் முதுகலை பட்டயம் பெற்றுள்ளோம். எங்களை சிறப்பு தேர்வு எழுத அனுமதிக்க ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி கண்ணன், மனுதாரர் ஆறுமுகம் உள்ளிட்ட 10 பேரை கணினி ஆசிரியர் பணி நியமனத்திற்கான சிறப்பு தேர்வு எழுதுவதற்கு அனுமதிக்க வேண்டும் என்றும் ஆனால், தேர்வு முடிவை வெளியிடக்கூடாது என்றும் உத்தரவிட்டார்.