கணிதம், அறிவியலில் குறைந்து வரும் மாணவர் எண்ணிக்கை!
நமது நாடு சத்தமின்றி ஒரு பெரிய அச்சுறுத்தலை சந்திக்கத் தயாராகி வருகிறது. கணிதம், அறிவியல் பட்டதாரிகள் பற்றாக்குறையால் நாட்டில் உள்ள தொழிற்துறை நிறுவனங்கள் வருங்காலத்தில் பெரும் நெருக்கடியை சந்திக்க நேரிடலாம் என்பதே அது.
இன்றைய தலைமுறை மாணவர்கள் இடையே ஏற்பட்டுள்ள தகவல் தொழில்நுட்பம், மென்பொருள் துறை மோகத்தால் கணித, அறிவியல் பட்டதாரிகளின் எண்ணிகை தற்போது கணிசமாகச் சரிந்து வருகிறது.
எதிர்காலத்தில் இத்துறைகளில் ஏற்படும் வல்லுனர்களின் தேவையை எவ்வாறு பூர்த்தி செய்வது என்ற கவலை தொழில் நிறுவனங்களை வாட்டி எடுக்கத் தொடங்கியுள்ளன.
இந்நெருக்கடியை உணர்ந்துள்ள மகராஷ்டிரா மாநிலம் அனூத்தில் உள்ள டி.ஏ.பி. கல்வி நிறுவனம், அமெரிக்காவைச் சேர்ந்த ஹனிவெல் எஸ்.ஏ.ஈ. என்ற பன்னாட்டு நிறுவனத்துடன் இணைந்து கணித, அறிவியல் பாடங்களின் பக்கம் மாணவர்களை மீண்டும் ஈர்க்கத் திட்டம் வகுத்துள்ளது.
இதன்படி இத்துறைகள் மீது மாணவர்களின் கவனத்தை திருப்பும் வகையில் 'ஸ்டூடண்ட் ஆட்டோமோடிவ் டிசைன் சேலஞ்ச் (எஸ்.ஏ.டி.சி.)' என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. ஆறு நாடுகளைச் சேர்ந்த 11 முதல் 14 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு, அன்றாட வாழ்வில் கணிதம், அறிவியல் பாடங்களின் தேவையை கண்டறியும் பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.
மேலும், எதிர்காலத்தில் இவ்விரு துறைகளில் ஏற்படும் வேலைவாய்ப்புகள் குறித்தும் இம்மாணவர்கள் இடையே விழிப்புணைவை ஏற்படுத்தும் செயல்முறை விளக்கங்களும் இதில் அளிக்கப்படுகிறது.
இதன் மூலம், மாணவர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள பிற துறை மோகங்கள் குறைந்து இத்துறைகளின் தேவை, இதில் உள்ள வேலைவாய்ப்புகளை அவர்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டும் என்று கருதப்படுகிறது.
இதற்கேற்ப, தேசிய அறிவியல் நிறுவன விருதைப் பெற்ற ஏ.டபிள்யூ.ஐ.எம். பாடத்திட்டத்தை எஸ்.ஏ.டி.சி. பயன்படுத்துகிறது. கணிதம், அறிவியல் துறைகளில் மாணவர்களின் திறனை வளர்க்கும் வகையில் அது வடிவமைக்கப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் நாட்டில் கணித வல்லுனர்களும், அறிவியல் மேதைகளும் இல்லாமல் போய்விடுவார்களோ என்ற மிகப்பெரிய கவலையை நன்கு உணர்ந்துள்ள டி.ஏ.பி. கல்வி நிறுவனம், அதற்கேற்ற தற்போதே மாணவர்களை தயார் செய்யும் வகையில் இத்தகைய பயிற்சி அளிப்பது பாராட்டுக்குறியது.
இந்த பயிற்சி தொடர்பான மேலும் விவரங்களை 020 - 40052988 என்ற தொலைபேசி எண்ணிலோ, 09823620226 என்ற செல்பேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு அறியலாம்.