வரும் கல்வியண்டில் பெரம்பலூரில் சட்டக் கல்லூரி தொடங்கப்படும் என்று மத்திய தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் ஆ.ராசா தெரிவித்துள்ளார்.
தனது சொந்த தொகுதியான பெரம்பலூரில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், பதினோராம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு இலவச மிதிவண்டிகளை (சைக்கிள்) வழங்கினார்.
அப்போது பேசிய அமைச்சர் ராசா, முதலமைச்சர் கருணாநிதியின் ஆட்சியின் கீழ் தமிழகம் அனைத்து துறைகளிலும் முன்னேறி வருகிறது. குறிப்பாக கல்வித் துறையில் மிகப்பெரிய வளர்ச்சியை கண்டு வருகிறது என்றார்.
தமிழகத்தில் தற்போது பட்டப்படிப்பு வரை கல்வி இலவசமாக அளிக்கப்படுவதை சுட்டிக் காட்டிய அவர், கிராமப்புற மாணவர்களின் முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு பொறியியல், மருத்துவம், கலைக் கல்லூரிகளை அரசு தொடங்கி வருவதாகச் சொன்னார்.
வரும் கல்வியாண்டில் பெரம்பலூரில் சட்டக் கல்லூரி தொடங்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக, அமைச்சர் ஆ. ராசா மேலும் கூறினார்.